தருமபுரி மாவட்டத்தில் பருவ மழை தவறிய நிலையில், இப்போது என்ன சாகுபடி செய்யலாம் என்று விவசாயிகள் யோசனையில் ஆழந்துவந்தனர்.  இது குறித்து வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.




துவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை


பருவ மழை தவறி பெய்தாலும் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலிலும் துவரை சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தருமபுரி வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.


நடப்பாண்டில் தருமபுரி வேளாண்மை துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய 3,980 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருவமழை தவறினாலும் பருவம் போகாமல் புதிய தொழில்நுட்பமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாதிப்பு இல்லாமல் பயிரிட புதிய தொழில்நுட்பம்


பருவம் தவறினாலும் பாதிப்பின்றி துவரை சாகுபடி செய்ய புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு சாகுபடி முறையை பின்பற்றி துவரையில் அதிகமாக மகசூல் பெறலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனார்.  இதற்கு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் முன் வர வேண்டும் எனவும் இதற்காக அரசு மானியம் வழங்குகிறது எனவும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.


எப்போது துவரை சாகுபடி செய்யலாம் ?


துவரை சாகுபடி செய்ய ஆடி பட்டம் சிறந்த பருவமாக இருக்கும். இந்த  துவரை நாற்று  நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு ஒரு கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டைகோடெர்மாவிரிடி கொண்டு விதையை நேர்த்தி செய்து, 24 மணி நேரத்திற்கு பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.


இதில் 6-க்கு 4 அங்குல அளவில், 200 மைக்கிரான் பாலித்தீன் பையில் மண், மணல், தொழு உரம் ஆகியவை 1:1:1 என்ற அளவில் நிரப்பவும். மேலும் நடுவதற்கு சில நாட்கள் முன், இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து கடினப்படுத்தி, பின்பு நடவு செய்வது நல்லது. இந்த விதைகளை ஒரு சென்டிமீட்டர் ஆழத்தில், நடவிற்க்கு 30 முதல் 45 நாட்கள் முன்பாகவே விதைக்கப்பட வேண்டும். ஐந்து அடிக்கு 3 அடி அளவில், ஊடுபயிர் ஆறு அடிக்கு 3 அடி என்ற அளவில் நட வேண்டும். நடவு செய்த 20 முதல் 30 நாளில் என்பிகேயை 25:50:25 ஒரு கிலோ, ஒரு ஹெக்டர் என்ற விகிதத்தில் இடவேண்டும். நடவு செய்த 20 முதல் 30 நாளில் முனை வளர்ச்சியை தடுக்க நுனியை கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக பக்க கிளைகள் உருவாகி அதிக விளைச்சல் கிடைக்கிறது.


உரம் விடுவது எப்படி ?


இலைவழி ஊட்டம் டிஏபி, 2 சதவீதத்தை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிகமாக மகசூல் பெற முடியும். மேலும் இந்த முறையில் நாற்று நடவுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஹெக்டருக்கு 9000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானிய விலையில், விதை, உயிர் உரம், நுண்ணூட்ட கலவை, பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் 2% டிஏபி கரைசல் வழங்கப்படுகிறது. எனவே இந்த மாதிரியான துவரை நடவு நாற்று நடவு முறையை பின்பற்றி அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இந்த மானியங்களை பெற விவசாயிகள் முன் வர வேண்டும் என தருமபுரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.