புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆற்றுப்பாசனம், ஆழ்குழாய் கிணறு மற்றும் மானாவாரி பயிராக சம்பா நெல் சாகுபடி பணிகளில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விவசாயிகள் மூலமாக, உற்பத்தி ஆகும் நெல் மணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக, விற்பனை செய்தும் வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள நெல் தானிய மையங்கள் சம தளம் இல்லாமலும் உரிய சிமெண்டு தளம் மற்றும் தானிய சேமிப்பு கிடங்கு வசதி இல்லாமலும் இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்யும் சமயங்களில் வானம் பார்த்த நிலையில் நெல் மணிகளை கொட்டி வைத்து பனி மற்றும் மழை பெய்யும் நேரங்களில் நெல் மணிகளை பாதுகாக்க விவசாயிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:
வடகாடு பகுதிகளில் ஆண்டு முழுவதும் கூட நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளை பாதுகாக்க அரசு உரிய முறையில் அதற்கான வழிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும் பெரும்பாலான இடங்களில் தானியங்களை உலர வைக்கக்கூட உரிய சிமெண்டு தளம் போன்ற வசதிகள் இன்றி விவசாயிகள் சாலைகளில் கூட தங்களது தானியங்களை உலர வைத்து வருகின்றனர். இதனால் உரிய இடங்களில் சிமெண்டு தளம் அமைத்து கொடுத்தால் ஏதுவாக இருக்கும் என்றனர். விவசாயிகள் ஏற்கனவே பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு மற்றும் வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக, விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த விளை பொருட்கள் வீணாகாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் மழைக்காலங்களில் நெல் மனிகள் அனைத்து சேதம் அடைந்து விடுகிறது. இதனால விவசாயிகள் என்ன செய்வது என்று திகைத்து போய் உள்ளனர். ஆகையால் மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதரத்தை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்