திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 13.50 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கிவைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 24 அன்று திறக்கப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் முன்கூட்டியே தொடங்குவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் இருந்து காக்கப்படும். மேலும் அறுவடையும் முன்கூட்டியே வருவதனால் வடகிழக்குப் பருவ மழையினால் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 13.50 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தினை முதலமைச்சர் அறிவித்துள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ டிஏபி 50 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ என ஒரு ஏக்கருக்கு ரூபாய் 2466.50 மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு மட்டுமே உரங்களை இலவசமாக பெற முடியும். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் 30 ஆயிரம் ஏக்கருக்கு ரூபாய் 103.50 லட்சம் மதிப்பில் 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை நெல் வழங்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற இந்த குறுவை தொகுப்பு வழங்கும் நிகழ்சியில் கலந்து கொண்ட திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆகியோர் அப்பகுதி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பை வழங்கினர். முன்னதாக இந்த நிகழ்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாட யாரும் முன்வராத காரணத்தினால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட வருவாய் அலுவலரும் தமிழ் தாய் வாழ்த்து பாடி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஜூன் மாத உரத்தேவை என்பது 4,500 மெட்ரிக் டன் யூரியா 4,500 மெட்ரிக் டன் டிஏபி 910 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் ஆயிரத்து 500 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகும். அதில் 2473 மெட்ரிக் டன் யூரியாவும் 577 மெட்ரிக் டன் டிஏயியும் மற்றும் 176 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 367 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் தற்போது வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4909 மெட்ரிக் டன் யூரியாவும் 2988 மெட்ரிக் டன் டிஏபியும் 1606 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2127 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர கடைகளிலும் இருப்பு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு கூட்டுறவு துறையினால் ரூபாய் 352 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 568 நபர்களுக்கு 1622 ஏக்கருக்கு ரூ.3.32 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வங்கி துறையினால் ரூபாய் 2701 கோடி பயிர் கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 302 நபர்களுக்கு 12 ஆயிரத்து 415 ஏக்கருக்கு ரூபாய் 110.47 கோடி பயிர் கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்