மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். கடலூரில்  மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கி விவசாயிகள் குறைகளை கேட்பதற்கு முன்னதாக கடந்த மாதம் விவசாயிகள் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறினர்.

 

 அப்போது கடந்த மாதம் கொடுக்கப்பட்ட 399 மனுக்களில் 396 மனுக்களுக்கு பதில் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அப்போது குறுக்கிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்ற மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை  கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கு பதில் இல்லை? என விவசாயிகள் தெரிவித்தனர்.

 



 

மேலும் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுக்கப்பட்ட மனு காணாமல் போய் உள்ளது என விவசாயி கூறிய நிலையில் குறை கேட்பு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனு காணாமல் போய் இருப்பது கூட ஒரு குறை தான் என்றும் அதை என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள் நடவடிக்கை எடுப்பேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை தொடர்பாக கொடுத்த மனுவிற்கு நடவடிக்கைகள் இல்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.



 

மேலும், வட கிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில்  விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக வேளாண், தோட்டக்கலை துறை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அடுத்து பயிர் செய்வதற்கு தேவையான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

 

 சேத்தியாத்தோப்பு பகுதியில் உரத்தட்டுப்பாடு அதிகம் உள்ளது. நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, மாற்று இடம், நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இந்நிலையில், 3வது சுரங்கத்திற்கு நிலம் கையப்டுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.