தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த போதிலும், அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் குளங்கள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளதால் பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பிசான நெல் சாகுபடியில் தாதம் ஏற்பட்டுள்ள போதிலும் 16 ஆயிரம் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் நம்பிக்கை.




தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் ஆண்டு தோறும் பிசான நெல் சாகுபடி நடைபெறுகிறது. வழக்கமாக நவம்பர் தொடக்கத்தில் பிசான நெல் சாகுபடி பணிகள் தொடங்கிவிடும். அதுபோல ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15-ம் தேதி வாக்கில் தொடங்கிவிடும். இதனால் அணைகளில் இருந்தும் அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தண்ணீரும் திறக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் பிசான நெல் சாகுபடிக்காக அணைகளில் இருந்து நவம்பர் 4-ம் தேதி முதல் தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. இதனால் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை.




மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஏற்கனவே ஓரளவுக்கு தண்ணீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி பாசன குளங்களில் போதுமான அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பருவமழை சரியாக பெய்யாததாலும், அணைகளில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பிசான நெல் சாகுபடி பணிகளும் தாமதமாகவே தொடங்கின.




ஒருசில பகுதிகளில் மட்டும் குளங்களில் ஏற்கனவே இருந்த தண்ணீரை நம்பி விவசாயிகள் நவம்பர் மாத தொடக்கத்தில் பிசான நெல் நடவு பணிகளை மேற்கொண்டனர். அந்த இடங்களில் மட்டும் தற்போது நெல் பயிர் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற அனைத்து பகுதிகளிலும் தற்போது தான் பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் பிசான நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிடும். இந்த ஆண்டு பிசான நெல் நடவு பணிகளே ஜனவரி 15 வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


இது குறித்து தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, கோரம்பள்ளம் குளத்தில் இந்த ஆண்டு ஏற்கனவே ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது. தற்போது அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக குளம் நிரம்பியுள்ளது. இதனால் முன்கூட்டியே பிசான நெல் நடவு பணிகளை செய்துள்ளோம். தற்போது பயிர்கள் 25 நாட்கள் வளர்ந்த நிலையில் உள்ளன. உரம் போடுதல், களை பறித்தல் பணிகளை தற்போது செய்து வருகிறோம். மழை சரியாக பெய்யாத போதிலும் குளத்தில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வராது என எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.




இது குறித்து மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் கூறும்போது,மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டேர் ஆகும். கடந்த ஆண்டு 16,200 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 19,477 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு 16 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பிசான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் 16 ஆயிரம் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.


இந்த ஆண்டு பிசான நெல் சாகுபடியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை பிசான நெல் நடவு பணிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், பிசான நெல் சாகுபடிக்கு தேவையான டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன என்றார்