தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகள் அனைவரும் செங்கரும்பை வைத்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இதற்காக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்று இருந்தது. இதனால் செங்கரும்பின் தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் விவசாயிகள் விலை அதிகமாக கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்து வந்தனர். மேலும் செங்கரும்பு தொகுப்பில் வழங்காத காலங்களில் வியாபாரிகள் குறைந்த விலைக்கு செங்கரும்பை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் ஏக்கருக்கு ஒன்னரை லட்சம் செலவு செய்தும் போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

 

இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெற்றவுடன் கரும்பு தேவை அதிகரித்ததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்வதில் ஆர்வம்காட்டி வந்தனர். மேலும் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு தேவையான செங்கரும்புகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு பொங்கல் தொகுப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதில் பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சக்கரை மற்றும் ரொக்கம் ஆயிரம் என அறிவித்தது. இதனால் செங்கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 



இதனைத் தொடர்ந்து செங்கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி, தஞ்சாவூர், கடலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் கரும்பை வைத்துக் கொண்டு வைத்து கொண்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என உத்தரவிட்டார். அதேபோல் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து தேவையான கரும்பை கொள்முதல் செய்து கொண்டு, தேவை இருக்கும் பட்சத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியினார். இதனால் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஆனால் அரசு விவசாயிகளிடம், பாதி அளவிற்கு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும், ஆறு அடிக்கு குறைவாக இருக்கிற கரும்புகளை கொள்முதல் செய்யக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளிடமே செங்குரும்பை செய்வதற்கு கரும்பை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கரும்பு முழுவதும் கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும், பாதி அளவு கொள்முதல் செய்தால் மீதி இருக்கின்ற கரும்பை வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கேட்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் கரும்பு விளைவது என்பது விவசாயிகளின் கையில் இல்லை. எனவே விவசாயிகளிடம் இருக்கின்ற கரும்பு முழுவதையும் அரசு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 70 ஆயிரம் கரும்புகள் தேவைப்படுகிறது. ஆனால் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் ஒரு லட்சம் கரும்புகள் கூட வராது. ஆகவே மாவட்டம் முழுவதும் பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து முழு கருப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தியிடம் கேட்டபோது, "பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய அதிகாரிகள் குழு வயலில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில் முழு கரும்பை கொள்முதல் செய்ய இயலாது.‌ மேலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும். அதேபோல் கரும்பின் தரம் இருக்க வேண்டும். ஆறடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் கொள்முதல் செய்ய முடியாது. தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான 4.70 இலட்சம் கரும்புகளில் உள்ளூர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்தது தவிர, மேலும் தேவைக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.