மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களிலும் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயிக்கான உதவித்தொகை

தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் நலனைப் பேணும் வகையில் திருமண உதவித்தொகை, இயற்கை இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உழவர் பாதுகாப்புத் திட்டம்

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்பாராத தேவைகளின்போது உடனிருந்து உதவவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் விளங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் குடும்பங்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, விவசாயிகளின் பிள்ளைகளின் திருமணச் செலவுகளைக் குறைக்கும் வகையில் திருமண உதவித்தொகை, விவசாயி எதிர்பாராத விதமாக இயற்கை எய்தும் பட்சத்தில் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு உதவித்தொகையுடன் கூடிய நிவாரணம், விபத்து நேரிட்டு மரணம் அல்லது காயம் ஏற்படும்போது உதவித்தொகை, விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர கல்வி உதவித்தொகை என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தத் திட்டம் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு முகாம்  

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டு தங்களின் வாழ்வாதார காத்து வருகின்றனர். அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்கள் அனைவரையும் சென்றடையவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் நலனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஏப்ரல் 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகங்களிலும் இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை வைத்துள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்து பயனடையலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அழைப்பு 

அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள சிறப்பு முகாம்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக விவசாயிகள் தாலுகா அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இந்த சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நடைபெறுவதால், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே விண்ணப்பங்களை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும். இதனால், நேர விரயம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்படும். இந்த சிறப்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை வைத்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். 

ஆவணங்கள் 

திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது திருமண அழைப்பிதழ், மணமகன் மற்றும் மணமகள் இருவரின் வயது சான்றிதழ், உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இயற்கை இறப்பு அல்லது விபத்தில் உயிரிழப்புக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை நகல் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களை அளிக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ சான்றிதழ் மற்றும் ஆவணங்கள், கல்வி உதவித்தொகைக்கு மாணவரின் அடையாள அட்டை, பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை நகல் போன்ற ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.