காஞ்சிபுரம் மாவட்ட பண்ணைக்குட்டை விவசாயிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் சேமிப்பிற்கும், வழிந்தோடும் மழை நீரினால் மண் அரிமானத்தை தடுக்கவும், மண்வள பாதுகாப்பிற்கும், மிக சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வு வயல்தோறும் பண்ணைக்குட்டை அமைப்பதாகும். அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண்வள பாதிப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணை குட்டையின் கொள்ளளவு 60 கன மீட்டர் அதாவது 60,000 லிட்டர் ஆகும். இதை குறைந்த செலவில் அமைக்க நவீன இயந்திரமான பொக்லைனை பயன்படுத்தலாம்.



ரூ.5000 வரை செலவாகும். பண்ணை குட்டையால் வயலில் வழிந்தோடி கடலில் கலக்கும்நீரை திறம்பட சேமிக்கலாம். மண் அரிமானம் தடுக்கப்படும். மண்வளம் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் உயரும், குடிநீரின் தரம் மேம்படும். நிலத்தடி நீரில் உப்பு நீங்கி நல்ல நீராகும். வெள்ளசேதம் தவிர்க்கப்படும். மழை குறைவான காலங்களில் வறட்சியை சமாளிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயருவதால் செடிகள், மரங்கள் உருவாகி தழைத்து பசுமை போர்வை உருவாகும். கடல் நீர் நிலத்தடி நீரில் ஊடுருவல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உருவாகும். பூமி சூடாகுதல் தானே தணிக்கப்படும். பண்ணை குட்டையின் அளவினை 10 சென்ட்டுக்கு மேல் 50 சென்ட் பரப்பளவில் அமைத்து மீன் குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்யலாம்.



 

இது ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் நிலையான வருமானத்திற்கும் உறுதி அளிக்கும். எனவே, அனைத்து பகுதியிலும் விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைக்க திட்டங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதி வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் விவரம் பெற்று பண்ணை குட்டை அமைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். விருப்பம் உள்ள நபர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள வேளாண்மை உதவி மையங்களின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.