மயிலாடுதுறை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் தொடக்கமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய செயலி (App) மூலம் விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Continues below advertisement

புயல் மழையால் 55,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த நவம்பர் 28ஸ-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி வரை டிட்வா புயலின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மிதமான முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்தது. இந்த இடைவிடாத மழையால், மாவட்டத்தில் சுமார் 55,000 ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகின.

நேற்று முதல் மழை ஓய்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

புதிய செயலி மூலம் கணக்கெடுப்பு 

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மழையால் சம்பா பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகள், பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய செயலி (New App) மூலம் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

 

முதற்கட்டமாக, சீர்காழி தாலுகா நாங்கூர் பகுதியில் புதிய செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட மொழையூர் ஊராட்சி காளிங்கராயன் ஓடை பகுதியில், வேளாண் இணை இயக்குனர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தனர்.

ஜிபிஆர்எஸ் கேமரா மூலம் ஆவணப்படுத்துதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து, சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலர்கள் ஜிபிஆர்எஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, அவற்றை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு முதல், பயிர் சேத மதிப்பீடு புதிய செயலி மூலம், அதிகாரிகள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை & அதிகாரிகளின் விளக்கம்

விவசாயிகள் கோரிக்கை

"வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாகவும், முறையாகவும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். சாலையோரங்களில் உள்ள பாதிப்புகளை மட்டும் பார்க்காமல், குக்கிராமங்களில் மழையால் பல இடங்களில் முழுமையாகச் சேதமடைந்துள்ள பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்

இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர் கூறுகையில்:

* மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 68,000 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

* டிட்வா புயல் மழையால் 18,189 ஹெக்டேர் (சுமார் 45,000 ஏக்கர்) விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்து தற்போது வடிந்து வருகிறது.

* இதில் கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாகத் தண்ணீர் தேங்கியிருந்த சுமார் 10,000 ஹெக்டேரில் (சுமார் 25,000 ஏக்கர்) நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

* தமிழக அரசின் உத்தரவின் பேரில், 33 சதவீதத்துக்கு மேல் அழிந்த பயிர்களுக்கு கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

* இன்னும் ஐந்து தினங்களுக்குள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்று, உரிய கருத்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

* பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும், அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உடனடியாக அவர்கள் வயல்கள் ஆய்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணியில் சேர்க்கப்படும் என்றார்.