மயிலாடுதுறை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டித்வா புயலின் கோரத் தாண்டவத்தால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக, அரசுப் புள்ளிவிவரங்களின்படி சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பருவப் பயிர்கள் முழுவதுமாக மழை வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன. இந்த இழப்பு, ஏற்கனவே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த இரு மழை வெள்ளங்களால் பயிர்களை இழந்த நிலையில், மிகுந்த பொருட்செலவில் மூன்றாவது முறையாகப் பயிர் செய்த விவசாயிகளின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.
வடிந்து செல்லாத வெள்ளம்
தற்போது மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீர் வடிந்து செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் ₹ 30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், பயிர்கள் தண்ணீரில் அழுகி, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அலட்சியத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்
இத்தகைய இக்கட்டான நிலையில், நீரில் மூழ்கி அழுகிய பயிர்களைப் பார்வையிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் எவருமோ முன்வரவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முன்வைக்கின்றனர்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டெல்டா விவசாயிகளின் துயரத்தைக் கேட்டறிய மாவட்ட நிர்வாகம், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவருமே களத்திற்கு வரவில்லை. இதைவிட வேதனை என்னவென்றால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளை வந்து பார்வையிடவில்லை என்பது அரசின் விவசாயிகளின் மீதான அலட்சியப் போக்கையே காட்டுகிறது," என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
11 மாதமாக நிலுவையில் கடந்த கால நிவாரணம்!
விவசாயிகளின் இந்த துயரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கடந்த கால மழை வெள்ள நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அன்பழகன் அம்பலப்படுத்தினார்.
"கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் சுமார் 60,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூபாய் 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அறிவித்து 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த நிவாரணத் தொகை இன்னும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை," என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் விவசாயம் செய்வது கடினம்
தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால ஆட்சியில், இதுவரை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை (இன்சூரன்ஸ்) வழங்குவதில் பெரிய பலன் எதுவும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. பயிர் செய்த பின் கிடைக்கும் வருமானத்தை விட, இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் நஷ்டமே அதிகம். இந்த அரசு விவசாயிகளைப் புறக்கணித்து விட்டதா? என்ற எண்ணமே தோன்றுகிறது. இதற்கு முன்னர் இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பேரிடர் காலங்களில் உரிய நிவாரணமும் உடனடியாக வழங்கப்பட்டது," என்று அவர் சுட்டிக் காட்டினார்.
உடனடியாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன், தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தொடர் இழப்புகளால் சோர்வடைந்துள்ள டெல்டா விவசாயிகள், இனிமேல் விவசாயம் செய்வதா? அல்லது வேறு தொழிலுக்குச் செல்வதா என்று தெரியாமல் செய்வதறியாது திகைத்து நிற்பதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.