வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இரவில் வெப்ப நிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிர்கள் புகையான் பூச்சிகள் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிக உள்ளதாகவும், அதனை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை விட்டு, நாற்று வளர்த்து நடவு செய்த நெற்பயிர்கள் வளர்ந்து பால் வைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், புகையான் பூச்சி தாக்குதல் பெருமளவு நெற்கதிர்களை பாதித்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இந்த வகையான புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய செய்தி குறிப்பு
புகையான் பூச்சி தாக்குதல் குறித்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. "கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இரவில் வெப்ப நிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த பூச்சி தனது இளநிலை பருவங்கள் - வளர்ந்த பூச்சி பருவங்களில் கூட்டம், கூட்டமாக நெற்பயிரின் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு தன் ஊசி போன்ற வாயால் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி தடைபடுகின்றது. இப்பூச்சியின் தாக்குதலால் பயிர் திட்டுத்திட்டாக வட்ட வடிவில் காயத்தொடங்கி, பிறகு வயல் முழுவதுமுள்ள நெற்பயிர்கள் வாடிக் காய்ந்துவிடும்.
பாசன நீரின் மூலம் பரவும் பூச்சிகள்
வயலில் தண்ணீர் தேங்கியிருக்கின்ற இடங்களிலும் இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படும். இப்பூச்சியின் தாக்குதல் பயிர் நன்கு தூள்கட்டும் நிலையிலிருந்து மணி பிடித்து முற்றும் வரையில் அதிகம் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைத்தது போல காணப்படும். இந்த தாக்குதல் பாசன நீரின் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
300 முட்டைகள் வரை இடும் பூச்சிகள்
மேலும், முதுநிலையடைந்த தாய்ப் பூச்சிகள் ஒவ்வொன்றும் 200- 300 முட்டைகளை இலைத்தாளுக்குள் இடும். பயிரின் வளர்ச்சிக் காலத்தில் சாதாரணமாக இப்பூச்சியின் மூன்று தலைமுறைகள் தோன்றி சேதத்தை ஏற்படுத்துகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த பூச்சிகளில் இறக்கையுடையவை மற்றும் இறக்கையற்றவை என்று இரண்டு வகை உண்டு. பயிர் சேதமடைந்து காய்ந்து விட்ட நிலையில் இறக்கையுடைய பூச்சிகள் தோன்றுகின்றன. தாக்கப்பட்ட வயல் காய்ந்து விட்ட நிலையில் இவை மற்ற வயல்களுக்கு பாசன நீரின் மூலம் பரவும்.
புகையான் பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
வயலில் விளக்குப்பொறி அமைத்து புகையான் பூச்சிகளின் நட மாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம். தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சு வதை தவிர்க்கவும், வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்கவேண்டும். வயலில் ஒரு அங்குல உயரத்திற்கு மேல் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும். தேவைப்பட்டால் நீரை வடித்துப் பாய்ச்சலாம். புகையான் தாக்குதல் தெரிந்தால், அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த வயல்களில் தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்த்து விட்டு, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பிவேரியா பேசியானா, மெட்டா ரைசியம் அனிசோபிலே மற்றும் பண்புரிசிலியம் லில்லேசினம் ஆகிய பூஞ்சைகளில் ஏதேனும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் வயலின் அனைத்து பகுதிகள் மற்றும் வரப்பு, வாய்க்கால்கள் முழு வதும் நனையும்படி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.