செம்பனார் கோயிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் தடையின்றி பருத்தியினை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு 4986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலமுறையில் தேசிய மின்னணு சந்தை (இ-நாம்) திட்டத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதில் நிகழ்வாண்டு செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் ஓர் நாள் எந்தவித பிரச்சனையும் இன்றி பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று பருத்தியை விற்பனை செய்வதற்கு 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே 4 ஆயிரம் குவிண்டால் பருத்தி மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடுக்கி வைத்து இரவு பகலாக காத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று காலை வரவேண்டிய பருத்தி வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராமல் சீர்காழிக்கு சென்றுவிட்டதாக கூறபப்டுகிறது. மாலை 6 மணியை கடந்தும் வியாபாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் மயிலாடுதுறை- தரங்கம்பாடி பிரதான சாலையில் செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இடத்தில் பருத்தி மூட்டையுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரவிடாமல் தடுத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டு கொள்முதலை புறக்கணிப்பதாகவும், பருத்தி மூட்டை ஒன்றுக்கு மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை கூடுதலாக எடை வைத்து கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள் இவ்விவாகரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு வாரந்தோறும் தொய்வின்றி கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முறையாக செயல்பட்டு வரும் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் தேவையற்ற காரணங்களை கூறி பிரச்சனையை உருவாக்கி பருத்தி ஏலத்தை புறக்கணிக்கும் வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த செம்பனார்கோயில் காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்