கரூரில் தனியார் நிறுவனம் நடத்திய இரண்டாம் ஆண்டு விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.
கரூரை அடுத்த க.பரமத்தி அருகே ஐ கிராப் அக்ரிகல்ச்சர் என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டாக விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் விதைத் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழலில் இடுபொருட்கள் விலை ஏற்றம், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அவர்களது இடர்களை போக்கும் வகையிலும், இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்காகவும் இந்த கண்காட்சியில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல் நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் தொடர்பான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேபோல அத்தியாவசிய விவசாய கருவிகளின் பயன்பாடு குறித்தும், நாட்டு விதைகளும் அதன் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியல் குறித்தும், இயற்கை உரங்களும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அறியும் வகையில் அனைத்து விவசாய நவீன கருவிகளும், இடுபொருட்களும், அதற்கான ஆலோசனை குறிப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
இதுகுறித்து இந்த கண்காட்சி நிறுவனர் பாலாஜி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில் அதில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு தற்போதைய இளைஞர்கள் இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர்.
வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய பணியில் உள்ள கடுமையான சூழல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதனை எளிமைப்படுத்தும் வகையில், நவீன கருவிகளும், இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுபொருட்களும், அதற்கான ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
கரூரில் நடைபெற்ற ஐ கிராப் அக்ரிகல்ச்சர் என்கிற நவீன இயற்கை விவசாய நிறுவனம் நடத்தும் இரண்டு நாள் விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலத்தில் இளம் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு புதிய யுத்திகளை மேற்கொண்டு விவசாய மேற்கொள்ள கண்காட்சியில் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.
அதேபோல் மாவட்டம் தோறும் விவசாயிகள் கண்காட்சி நடத்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்