மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெரும் அளவு விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50,000 ஏக்கருக்கு மேல் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.




ஆண்டுதோறும் ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடைவதில்லை, என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக முன்கூட்டியே ஜூன் 12ம் தேதி முன்னர் திறக்கப்பட்டும் இதுவரை  தண்ணீர் வந்து சேராதது விவசாயிகளை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.




பருவம் தவறாது வாழ்வாதார தொழிலான விவசாயத்தை விட்டு விடக்கூடாது  என்ற குறிக்கோளோடு, தொடர்ந்து சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் தேவையான நேரத்தில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் மோட்டார் பம்பு செட் மூலம் கிடைத்த தண்ணீரைக் கொண்டு பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். 




எனினும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அந்த பம்பு செட் தண்ணீரும் எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் தவித்து போய் வருகின்றனர். இதனிடையே உரத்தட்டுப்பாடு, விவசாய கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, என விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சோதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் , சீர்காழி கடைமடை பகுதியில் உள்ள பெரும்பாலான ராஜன் வாய்க்கால், கழுமலைஆறு, பொறைவாய்க்கால், போன்ற ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராத நிலையில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 1.25  கன அடிக்கு மேல் உபரி தண்ணீர் இரண்டு கரைகளும் தொட்டுக்கொண்டு யாருக்குமே பயன்படாமல் கடலுக்குச் சென்று வீணாக கலப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 




மேலும், ஒரு பக்கம் ஆறு வாய்க்கால்கள் வறண்டு கிடக்கிறது, மற்றொரு பக்கம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திரண்டு செல்கிறது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காட்சிகள் மட்டும் மாறவில்லை, என்கின்றனர் விவசாயிகள். எப்போது கிடைக்கும் நிரந்தர தீர்வு ஏங்கித் தவிக்கும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஏபிபி செய்தி தளத்தில் கடந்த ஜூன் 19 ம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் எதிரொலியாக தற்போது தண்ணீர் செல்லாமல் வறண்டு கிடந்த ராஜன் வாய்க்காலில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பி செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் நிலத்தடி நீர் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண