கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 243 கன அடியாக குறைந்தது. இதனால், பொதுமக்கள் தடுப்பணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 873 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 850 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.




இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அணைப் பகுதிகளில் பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கனஅடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 88.09 அடியாக இருந்தது.




கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 11 ஆயிரத்து, 405 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ,21 ஆயிரத்து, 554 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 20 ஆயிரத்து, 334 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.33 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




அமராவதி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை


அமராவதி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்டம் மக்களின் தேவைகளையும் ஒரே சேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரூர் ஆண்டாங்கோயில் தடுப்பணையில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று, கரூர் அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது.




இந்த நிலையில், ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி ஆற்றுப்பகுதியின் சில இடங்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி விடுகிறது. இதனால் மற்ற செடி, கொடிகள் வளர்வது பாதிக்கப்படுகிறது. கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால் இந்த பகுதியில் உள்ள நீர் வளமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.




வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கருவேல மரங்களை முற்றிலும் ஆற்றுப்பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.