கரூர் மாவட்டத்தில் காய்களின் விலையை விட கருவேப்பிலையின் விலை உயர்வு.


 


 




 


 கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக கருவேப்பிலை வரத்து குறைந்ததால் உழவர் சந்தையில் கருவேப்பில்லை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை-பாஸ் சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாட்டு காய்கள், மலைக் காய்கள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. அவற்றை கரூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே வந்து வாங்கிச் செல்கின்றனர். நாள்தோறும் அவர்கள் கொண்டு வரும் காய்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரிசையில் கருவேப்பிலை 1 கிலோ 100 முதல் 80 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 


 




 


கடந்த சில மாதங்களாக பெய்யும் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் இல்லாததாலும், பனியினால் கருவேப்பிலை இலைகள் அழுகி காய்ந்து போவதால் வரத்து குறைந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போன்று கரூர் மாவட்டத்தில் அதிகளவில் விளைச்சல் தரும் முருங்கை காய்கள் கிலோ 120 ரூபாய்க்கும், மாய்காய் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கருவேப்பிலை உழவர் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபாரிகளில் கிலோ 110 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் 2 வியாபாரிகள் மட்டுமே கருவேப்பிலையை விற்பனை செய்கின்றனர்.


 




 


கொத்தமல்லி, புதினா கட்டுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கருவேப்பிலை ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தைக்கு வெளி பகுதியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் இந்த கருவேப்பிலைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.அவை கட்டுகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கள் வாங்கும் போது இலவச இணைப்பாக வழங்கப்படும் இந்த கருவேப்பிலை கிலோ 100 ரூபாய் என்பது அனைவரையும் ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.