கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரத்து, 807 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 15 ஆயிரத்து, 838 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதி குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 14 ஆயிரத்து, 618 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டிருந்தது. தற்போது மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 803 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம், 88.55 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று வினாடிக்கு 185 கன அடியாக தண்ணீர் வந்தது. 




திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம், தற்போது 33.92 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 16.20 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களாக அணையின் நீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. நேற்றைய முன் தினம், மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்த நிலையில், தற்போது மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.