தமிழகத்தில் அண்மையில் பிரபலமான ஒன்று தான் டிராகன் பழம். இப்போது பரவலாக எல்லா பழச்சந்தைகளிலும் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று டிராகன் போல் வித்தியாசமாக இருக்கும் இந்த பழத்தின் தாயகம்  தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். டிராகன் பழம் தமிழ்நாட்டில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது குறைந்த அளவில் தான் இந்த டிராகன் பழம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டு உள்ள இந்த பழமானது தற்போது விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருகிறது.

 

இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் முன்னாள் முதன்மை விஞ்ஞானி டாக்டர் மோகன்தாஸ் நம்மிடம் கூறுகையில், சுமார் இரண்டு ஆண்டுகளாக நான் இந்த டிராகன் பழம் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறேன். நல்ல லாபம் கிடைக்கிறது. கிட்டத்தட்ட கிலோ ஒன்றிற்கு 300 ரூபாய் வரை கிடைக்கிறது , குமரி மாவட்டத்தில் உள்ள தட்பவெட்பநிலையால் இந்த பழம் நன்கு வளர உதவி செய்கிறது. மக்கள் மத்தியில் இந்த டிராகன் பழத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இதனை எளிதில் சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட முடியும் என்றும் அரசு இந்தப் பயிரை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

 

டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. அவை ,சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம் ,சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம், மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். பொதுவாக இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையில் இருக்கும். சதையில் கருப்புப் புள்ளிகளாக விதைகள் இருக்கும். 

 



 

டிராகன் பழம் பயிரிடும் முறை :

 

டிராகன் பழச்செடி நன்கு வடிகால் வசதியுள்ள, கரிம சத்து அதிகமுள்ள மண் வகைகளில் நன்கு வளரும். சற்று அமிலத்தன்மையுள்ள மண் வகைகள் சிறப்பானவை. வறண்ட, வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல தட்ப வெப்பநிலையில் நன்கு வளரக்கூடியது. நல்லசூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் வளரும். தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

டிராகன் பழப்பயிரின் இனப்பெருக்கம் தண்டுகள் மூலம் செய்யப்படுகிறது. தண்டுகளை 10-40 செ.மீ அளவுள்ள துண்டுகளாக நறுக்கி, பாலை வடியவிட்டு, மணல், தொழு உரம் கலந்தமண் நிரப்பியுள்ள 12x30 செ.மீ பாலீத்தின் பைகளில் நடவேண்டும். 4-5 மாதங்களுக்கு பிறகு நன்கு வேர்விட்ட தண்டுகளை நடவுக்கு பயன்படுத்தலாம். நன்கு வேர் விட்ட தண்டுகள் 3-4x3-4 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.6.5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை ஆகும். ஒரு தூணுக்கு 4 செடிகள் என்ற வீதம் நடவு குழியில் மணல் கலந்து நடவு செய்யவேண்டும். ஹெக்டேருக்கு 1,780 செடிகள் நடலாம்.

 



 

செடிகள் நடுவதற்கு முன்பே 5-6 அடி உயரமுள்ள கல் அல்லது சிமெண்ட் தூண்களை நடவேண்டும். செடிகளை தாங்கி வளர்வதற்காக தூண்களின் நுனிப்பகுதியில் வட்டவடிவ உலோக அல்லது சிமெண்ட் அமைப்பு பொருத்தப்படவேண்டும். தண்டுகளை சிமெண்ட் அல்லது மர தூண்களோடு சேர்த்து கட்டி வளரவிடவேண்டும்.காய்ந்த, நோய் தாக்கிய, முதிர்ந்த தண்டுகளை அல்லது முதிர்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.சொட்டு நீர் பாசனம் வழியாக செடிக்கு 2-4 லிட்டர் தண்ணீர் வாரம் இரு முறை தருவது சிறந்தது. செடிகளுக்கு அதிகமாக நீர் பாய்ச்சும் போது பூஞ்சான நோய்கள் தாக்கும். மழைக்காலங்களில் வடிகால் அமைத்து தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

 



 

 

அறுவடை செய்யும் முறை 

 

டிராகன் பழப்பயிர் நட்டதிலிருந்து 15-18  மாதங்களில் பழங்கள் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். 5 வருடங்களில் நிலையான  மகசூல் தொடங்கும். மே முதல் செப்டம்பர் வரை பூக்கும். பழங்களை ஜூலை முதல்  டிசம்பர் மாதம் வரை அறுவடை செய்யலாம். காய்கள் பச்சை நிறத்திலிருந்து  இளஞ்சிவப்பு நிறமாவதே அறுவடைக்கு ஏற்ற தருணம். பூக்கள் பூத்ததிலிருந்து  அறுவடை செய்ய 40-50 நாட்கள் ஆகும். ஒரு ஹெக்டேருக்கு 16-18 மாதத்தில் 4.5  டன் பழம் கிடைக்கும். 2ம் வருடத்தில் 7.5 டன் முதல் 10 டன் வரை பழங்கள்  கிடைக்கும். 3ம் ஆண்டு முதல் 16-22 டன் பழங்கள் கிடைக்கும். ஒரு முறை நடவு  செய்த செடிகளை 20 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம். பழங்களை 10 சென்டி கிரேடு  வெப்பநிலையில் 30-40 நாட்கள் வரை சேமிக்கலாம். தற்போது தமிழகத்தில் பிரபலமாகி வரும் இந்த டிராகன் பழ சாகுபடி செய்ய அரசும் உதவிகள் செய்வதால் விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.

 

மருத்துவ குணங்கள் 

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். புற்று நோய் செல்கள் உருவாகுவதை தடுக்கும் , ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான நோய்களை எதிர்க்கும். ரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை நடுநிலைப்படுத்துகிறது. உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்கிறது. போதிய விட்டமின்கள் இருப்பதால் இந்த பழம் அனைவருக்கும் உகந்த ஒரு பழவகையாக இருந்து வருகிறது.