பருவ மழை துவங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய டிசம்பர் மாதம் 15-ந் தேதி தான் கடைசி நாள் ஆகும். இந்த திட்டத்தில் பங்குபெற்று விவசாயிகள் பயன் அடைய வேண்டும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாத்திடவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதையும் ஊக்குவிக்கிறது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஆகும். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.515 மட்டும் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34 ஆயிரத்து 351 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவிக்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால், அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.