Just In




தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுப்பது எப்படி?
தென்னையில் ஏற்படும் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தஞ்சாவூர்: பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு... தென்னையைப் பெற்றால் இளநீரு... என்பது பழமொழி. காவிரி டெல்டா பகுதிகளில் பெருமளவு நெல் சாகுபடியே அதிகமென்றாலும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடியும் அதிகளவில் நடந்து வருகிறது. தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் ஏற்பட்டால் அதை தடுப்பது எப்படி என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி நடக்கிறது. மேலும் காய்கறிகள், பூக்கள், எள், உளுந்து போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தென்னை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடியும் அதிகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தென்னையில் ஏற்படும் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை சுமார் 45,000 எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தென்னை மிக முக்கிய வாழ்வாதார பயிராக உள்ளது. தென்னையில் பல்வேறு பூச்சிகள் சமீப ஆண்டுகளில் சவாலாக இருந்து வந்துள்ளது. இதில் தென்னை ஓலையில் பச்சயத்தை மட்டும் சாப்பிட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தும் கருந்தலைப்புழுவானது சமீப காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தியுள்ள ஆய்வில் மிதமான கருந்தலை புழு தாக்குதல் தென்னையில் தென்பட்டுள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னையில் கருந்தலைப்புழு வராமல் தடுக்க, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்
தென்னை மட்டைகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் கருத்தலை புழு தாக்கம் எங்கேனும் தென்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். காய்ந்த தென்னை மட்டைகள் மற்றும் 2 - 3 முதிர்ந்த தென்னை மட்டைகளை நீக்கிவிட வேண்டும். அவை கருந்தலைப் புழுவின் முட்டைகள் மற்றும் கூட்டுப் புழுவிற்கு புகலிடமாக அமையும்.
தென்னை ஓலைகள் மற்றும் மட்டைகள் வெளியூரில் இருந்து தோட்டங்களுக்கு கொண்டு வருவதை தடுக்க வேண்டும். இயற்கை எதிரிகளை அதிகரிக்கும் நோக்கில் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தவல்ல பிரக்கணாய்டு ஒட்டுண்ணிகளை ஒரு மரத்திற்கு 30 எண்ணிக்கை என்ற வீதத்தில் பண்ணைகளில் விட வேண்டும். தென்னைக்கு மிக சரியான அளவில் உரமிட்டு நீர் பாய்ச்சிவர வேண்டும். இதனால் தென்னை மரங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு கருந்தலைப்புழு தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
கருந்தலைப்புழுவானது எண்ணெய் பனை. பனை. ஈச்சமரம். பாக்கு மற்றும் அழகு பனைகளிலிருந்தும் பரவும் அதன் மூலமாகவும் நம் பண்ணைகளுக்கு பரவ வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மரங்களை நம் பண்ணைக்குள் கொண்டு வருவதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கருந்தலை புழு கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணியான பிரக்கனாய்டு ஒட்டுண்ணிகள் ஆயிரம் முட்டைகள் அடங்கிய அட்டை ரூபாய் 45க்கு கிடைக்கும். ஹெக்டருக்கு மூன்று அட்டைகளை வாங்கி தென்னை மரங்களில் கட்டுவதன் மூலம் கருந்தலை புழு பரவலை வெற்றிகரமாக தடுக்க முடியும். மகசூலை அதிகரிக்க முடியும். இவ்வாறு தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.