தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஈரப்பத தளர்வு அளித்து விவசாயிகளிடம் முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


புதிய உணவுக் கொள்கை என்ற பெயரால் நெல் கொள்முதலில் ஒன்றிய அரசால் மாநில அரசுக்கு இருந்த அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டது. மீண்டும் மாநில அரசுக்கு முன்பு இருந்த உரிமையை வழங்கி நெல் கொள்முதலை மாநில அரசே சுதந்திரமாக செய்ய வழி வகுக்க வேண்டும். நெல் கொள்முதலில் தட்பவெட்ப நிலை, மழைக்காலம் பனிக்காலம் போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியான ஈரப்பத கட்டுபாட்டு நடைமுறையை பின்பற்றுவது தமிழ்நாட்டிற்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


குறிப்பாக பிற மாநிலங்களில் நெல் கொள்முதல் கடும்வெயில் காலங்களில் நடைபெறுகிறது தமிழ்நாட்டில் மட்டும்தான் பெரும் மழை மற்றும் பனிக்காலங்களில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழ் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு விதிகளை ஏற்படுத்தி அமல்படுத்துவது தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு  மிகுந்த  பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை உடனுக்குடன் விற்க முடியாமல் முளைத்து வீணாகி பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள்.


மேலும் நெல் விலை ஆண்டுதோறும் நிர்ணயிப்பதும் காரிப் பருவம் என்று அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் குறுவை அறுவடை தொடங்கிவிடுவதால் அந்த ஒன்றரை மாத காலத்திற்கு சென்ற ஆண்டுக்கான விலையை விவசாயிகள்  பெற வேண்டிய நிலையில் புதிய விலை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் போராட வேண்டிய சூழல் உள்ளது. எனவே தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஈரப்பதத் தளர்வை மாநில அரசே முடிவு செய்து பரிந்துரை செய்யவும் அதை மத்திய அரசு ஏற்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டுகிறோம்.


சாதரணமாக பார்க்கும் போதே ஈரப்பத நெல் குறித்து முடிவுக்கு வர முடியும். கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்கின்ற போது துல்லியமாக ஈரப்பதம் பார்த்து கொள்முதல் செய்கின்ற நிலையில் மத்தியக் குழு வந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்வதெல்லாம் தேவையற்ற வேலை. ஒவ்வொரு முறையும் மத்திய குழு வந்து ஆய்வு செய்து மாதக்கணக்கில் காலம் கடத்தி ஈரப்பதத் தளர்வு அறிவிக்கும் போது அந்த தளர்வே தேவையில்லை என சாதாரண  தட்பவெப்ப நிலை வந்து விடும் என்ற சூழல் உருவாகிறது.


எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நெல் கொள்முதலுக்கு ஈரப்பதத் தளர்வை மாநில அரசே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை வழங்கவும்  நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் இழப்பையும் இடர்பாடுகளையும் களைய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசையும், மாநில அரசையும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தியக்குழுவை சேர்ந்தவர்கள் டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.