தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் சம்பா நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க காட்டுப்பன்றி விரட்டியை பயன்படுத்துமாறு விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தாமதமாக மேட்டூர் அணை ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் முன்பட்ட சம்பா நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாய் நாற்றங்கால், நடவுக்கான நாற்றங்கால் போன்றவற்றை தயார் செய்து வருகிறார்கள்.
அதன்படி, தற்போது திருவையாறு, மெலட்டூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்துள்ளனர். இதில் குறிப்பாக ஆற்றுப்படுகை, பாசன வாய்க்கால் உள்ள பகுதிகளில் உள்ள புதர்களில் காட்டுப்பன்றிகள் இருந்து கொண்டு அருகில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நாற்றங்கால்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் சம்பா விதை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விதை நாற்றங்காலை பன்றிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் மின்சார விளக்குகள், வண்ணத்துணிகளை வயல்களை சுற்றி கட்டியும் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரத்தில் இருந்து இயற்கை காட்டுப்பன்றி விரட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கை காட்டுப்பன்றி விரட்டியை 1 ஏக்கருக்கு 500 மிலி பயன்படுத்துவதன் மூலம் காட்டுப்பன்றி வருவதைக் கட்டுப்படுத்தலாம். இது குறித்து தஞ்சை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நெல் நடவு அல்லது விதை விதைத்துள்ள வயலை சுற்றியுள்ள வரப்புகளில் 2 அடி உயரமுள்ள குச்சிகளை 10 அடிக்கு 1 குச்சி வீதம் ஊன்ற வேண்டும். அக்குச்சியினை ஒன்றரை அடி உயரத்தில் கம்பி அல்லது சணல் கொண்டு அனைத்துக் குச்சிகளையும் இணைத்து கட்ட வேண்டும். இரண்டு குச்சிகளுக்கு இடையில் சிறிய பிளாஸ்டிக் டப்பா ஒன்றை கட்ட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 100 சிறிய (சுண்ணாம்பு) டப்பா தேவைப்படும். ஒவ்வொரு பிளாஸ்டிக் டப்பாவின் கழுத்துப்பகுதியில் 4 திசைகளிலும் சிறு துளையிட்டு துவாரம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் 5 மிலி அல்லது 1 தேக்கரண்டி அளவு மருந்தை ஊற்றி முட வேண்டும். இந்த டப்பா சாய்வாக இல்லாதவாறும், மழைநீர் உள்ளே புகாதவாறும் அமைக்கப்பட வேண்டும். டப்பாவினுள் ஊற்றப்பட்ட மருந்தில் இருந்துவரும் வாசனையால் காட்டுப்பன்றி அருகில் வராமல் ஓடிவிடும். இந்தக் காட்டுப்பன்றி விரட்டி தேவைப்படும்
விவசாயிகள் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பேராசிரியர் மற்றும் தலைவரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (0416-2272221) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.