மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தங்களிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதத்தை 17 சதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்தினர். மத்திய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர் உதவி மேலாளர் குணால் குமார், முதுநிலை மேலாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்லின் மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர்.
பாண்டூர் விவசாயி பழனி என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லில் 19 சதவீதம் ஈரப்பதம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மணல்மேடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் தரம் ஈரப்பதம் மற்றும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். மழையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நுகர்வு பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி கேந்திரா என்ற விவசாயிகள் செழிப்பு மையம் திறப்பு!
பாரதப் பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா என்ற விவசாயிகள் செழிப்பு மையம் இன்று நாடெங்கும் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் மாவட்டத்தில் ஒரு தனியார் உரக்கடை தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கடையில் நீர் மற்றும் மண் பரிசோதனை, விதைகள் பரிசோதனை, பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்படுவதுடன் யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே மகாதானபுரம் கிராமத்தில் உள்ள நடராஜன் உரக்கடை என்ற தனியார் உரக்கடை தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு விவசாயிகளின் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளியில் உரையாற்றிய பின்னர் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவன விற்பனை இயக்குனர் நாராயணன் இணைய வழியில் கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன் வேளாண், உதவி இயக்குனர் சிவ வீரபாண்டியன், ஸ்பிக் விற்பனை அலுவலர் மகேந்திரன், ராஜா மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.