குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியக்குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



நடப்பாண்டு கடந்த மே 24ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்துள்ளது. தற்போது வரை 80 சதவீதம் வரை குறுவை அறுவடை நடந்துள்ளது. அறுவடை தொடங்கியது முதல் தஞ்சை மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் மையங்கள் கடந்த செப்., 1 முதல் திறக்கப்பட்டன. விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிது. இதில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள்  அறுவடை செய்யும் நெல் நனைந்து ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறுவை அறுவடையின் போது, மழையால் நெல்மணிகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.





இந்நிலையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் அனுப்பியது. தொடர்ந்து நேற்று மத்திய உணவு கழக  ஹைதராபாத் உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையில், மத்திய உணவு கழக சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி சி.யுனஸ், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில், வணிக பொது மேலாளர் மகாலட்சுமி அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.

பின்னர், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

ஆலக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது விவசாயி பாரதி உட்பட ஏராளமான விவசாயிகள் குறுவை அறுவடையின் போது மழையால் நெல் ஈரமடைந்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.