இதையும் செய்யணும், அதையும் செய்யணும்... விவசாயிகள் வலியுறுத்தியது எதை?

பூதலூர் பகுதியில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும்.

Continues below advertisement

தஞ்சாவூர்: கடந்தாண்டு போல் இல்லாமல் கோடைகாலத்திலேயே பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.

Continues below advertisement

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: கடந்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும். இதில் காலதாமதம் செய்யக்கூடாது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு ரூ.500ம் அரசே வழங்க வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நிதி நிலை அறிக்கையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு டிராக்டர் மானியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கும் விவசாயக்கடன், நகைக்கடன் ஆகியவற்றை ஓராண்டு ஆனால் வட்டியை புதுப்பித்து கொள்வது வழக்கம். தற்போது முழுதொகையும், வட்டியும் சேர்த்து கட்டி புதுப்பித்துக் கொள்ள சொல்வது ஏற்புடையது அல்ல.

ஏகேஆர்.ரவிச்சந்திரன்: நில ஆவணங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் விவசாயிகள் அடையாள அட்டையை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஜூன் மாதம் தொடங்காமல், முன்கூட்டியே தொடங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதால், அந்த திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

திருவையாறு அறிவழகன்: திருவையாறு பகுதியில் காட்டுப்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு மகசூலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான இழப்பீடை பெற்றுத் தர வேண்டும். திருவையாறு பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை உடன் இயக்ககம் செய்ய வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்: கருப்பூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மின் இணைப்பு இல்லாததால், கொள்முதல் பணி நடைபெறவில்லை. உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனுக்கு முழுவதும் அசல், வட்டியை செலுத்த சொல்வதால், பாதிக்கப்படுகின்றனர். வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே வழங்கியது போன்று விவசாய நகைக்கடனுக்கு பின்னேற்பு வட்டி மானியம் 4 சதவீதம் வழங்க வேண்டும்.

பூதலூர் பாஸ்கர்: ராயமுண்டான்பட்டியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பூதலூர் பகுதியில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாதம் சம்பளம் நிலுவையில் உள்ளதால், கிராமப்புறங்களில் வயதானவர்களின் நிலை மோசமாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பட்டினிச்சாவு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடன் வழங்க வேண்டும்.

வேங்கராயன்குடிக்காடு து.வைத்திலிங்கம்: வேங்கராயன்குடிக்காட்டில் வீடு மற்றும் வயல்பகுதிக்கு செல்லும் மண் சாலையை தரம் உயர்த்த ஊரக வளர்ச்சி துறை அனுமதி வழங்கிய நிலையில், அங்கு வருவாய்த்துறையினர் நில அளவை செய்து தராமல் காலம் தாழ்த்துகின்றனர். உடன் அளவீடு செய்து தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் செ.இலக்கியா தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola