Just In





“விவசாயிகள் வாழ்க்கை 4 ஆண்டுக்கு முன்பு போராட்ட களமாக இருந்தது... ஆனால், இப்போது”- அமைச்சர் பன்னீர்செல்வம்
விவசாயிகள் 1991 கோரிக்கைகள் வைத்தனர். 977 கோரிக்கைகளை 4 ஆண்டுகாலங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என்றும் கூறினார்.

வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை 2025-26 விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல வாரியான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்தனர். அமைச்சர்கள் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கருத்துக்களை கேட்டுள்ளோம். கும்பகோணம், சென்னையில் தலா 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயத் தொழில் சார்ந்த தொழில் முனைவோர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தந்த மண்ணுக்கேற்ற விவசாயத் தேவைக்கான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏற்கனவே வேளாண்மைத்துறைக்காக தனி பட்ஜெட் 4 முறை தாக்கல் செய்யப்பட்டபோது, விவசாயிகள் 1991 கோரிக்கைகள் வைத்தனர். 977 கோரிக்கைகளை 4 ஆண்டுகாலங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்.
தற்போது நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர். தென்னை விவசாயிகள், ஊட்டி விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தென்னை விவசாயப் பாதிப்பு குறித்து கூறியதும், அதற்கு தீர்வு கண்டதற்கு பொள்ளாச்சி விவசாயிகள் பாராட்டியுள்ளனர். இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தில் தென்னை பாதிக்கப்பட்டபோது, முதல்வர் நேரடியாக வந்து அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார். மதிப்பு கூட்டுகின்ற வேலைகள், விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயத்தை லாபகரமாக மாற்றுவதற்குத் தேவையான கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான பயிற்சிகள், முறைகள், படிப்படியாக வேளாண் இயந்திரமயமாக்கலை செய்திருக்கிறோம் என்றார். தற்காலிகமாக ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகள், வெள்ளம், புயல், மழை பாதிப்புகளால் விவசாயிகள் வாழ்க்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போராட்ட களமாக இருந்தது. அது இப்போது இல்லை என்று விவசாயிகள் கூறினர். நான்கு ஆண்டுகளில் ரூ.1542 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இயற்கை இடர்பாடுகளின் போது போராட்டத்திற்கு பிறகு நிவாரணம் வழங்கப்பட்ட நிலை மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ஏதுமின்றி வழங்கப்பட்டுள்ளது. தற்போது எந்த நிலுவையும் இல்லை. விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப காப்பீடு பெற்றுத் தந்திருக்கிறோம். ரூ.5542 கோடி காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மின் இணைப்பை பொருத்தவரையில் கடந்த காலங்களில் சீண்டிக் கூட பார்க்கவில்லை. மின் இணைப்பிற்கு பதிவு செய்து. 15 ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் தொடர்ந்து விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் இது வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார்.
4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். விளை பொருட்களுக்கான விலை நிர்ணயம் தனி போராட்டமாக இருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து கவனிக்காமல் இருக்கிறது. தக்காளி விலையை சீசனுக்கேற்ற வகையில் செய்தி போடுகிறீர்கள். தக்காளியைப் பொருத்தவரை வீட்டுத் தோட்டத்தில் விளைவிப்பதை ஊக்குவித்து வருகிறோம். நகரப் பகுதியில் மாடித் தோட்டம் அமைக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மூலிகைப் பயிர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.