திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராணி மஹாலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கான இடைமுகப் பணிமனைக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:


தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலமாக இடைமுகப் பணிமனையானது செய்யாறு உபவடிவ நிலப்பகுதி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு வலுவான வேளாண் சந்தை இணைப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இடைமுகப் பணிமனையானது செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ‘நீரின்றி அமையாது உலகு என நீரின் முக்கியதுவத்தை உலகுக்கு உணர்த்திய திருவள்ளுவர் திருக்குறளுக்கு ஏற்ப உணவளிக்கும் விவசாயிகளுக்கு உயிரின்  ஆதாரம் நீர் ஆகும்.  உயிரினங்களின் வாழ்வாதாரமான நல்ல நீரின் பங்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் நீர் ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும் கையிருப்பில் உள்ள நீரினை திறம்பட பயன்படுத்தி ஒரு துளி நீரில் அதிக மகசூல் தரும்  எனும் குறிக்கோளின் அடிப்படையில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் பல்வேறு உபவடி நிலப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றது.




உரங்கள் விதை இடுப்பொருட்களை  குறைந்த விலையில் விநியோகம்


தமிழ்நாடு நீர்பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து விரிவான சந்தை வாய்ப்புகள் மற்றும் முதலீடு ஆதரவை பெறுவதற்காகவும் விற்பனை திறனை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்ற இடுப்பொருட்களை  குறைந்த விலையில் விநியோகம் செய்யவும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை ஒன்றாக திரட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், நவீன விவசாய கருவிகள் குறைந்த வாடகையில் பெற்றிடவும், விளைப்பொருட்களை உற்பத்தி செய்திட தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதியுதவி செய்து தரப்படுகிறது.மேலும் ஒன்றிய மாநில அரசுகளின் திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கிடைக்கும் நிதியை பெற்றுத்தரவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி உரிய தர குறியீட்டுடன் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படுகிறது. தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பான விழிப்புணர்வினை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தி தரப்படும்.




விவசாயிகள் அனைவரும் மரம் வளர்க வேண்டும் 


பொது, தனியார், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள வேளாண் வணிக வாய்ப்புகள் தொடர்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தனியார் வேளாண் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டு பயிர் வாரியான வியாபார தொடர்புகளுக்கென உள்ள வாய்ப்புகள் மற்றும் பங்குதாரர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தின் ஒருபகுதியாக நடத்தப்படும் இப்பணிமனையானது விவசாயிகளுக்கு நிறுவனம் சார்ந்த அடிப்படை விவரங்கள் விநியோக தொடர் மேலாண்மை வியாபாரம் சார்ந்த தொழில்நுட்பங்கள் போன்ற கருத்துக்களை பரிமாறவும் வழிவகை செய்கிறது. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மரம் நட்டு அதை வளர்ப்பதை ஒரு பழக்கமாக்கி கொள்ள வேண்டும். விவசாயிகள் இப்பணிமனையில் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி இருமடங்கு உற்பத்தி மற்றும் மும்மடங்கு வருமானம் பெறவும் உழைப்போம். ஒன்றிணைவோம் ஒன்றினைந்து தொழில்புரிந்து உயர்வோம் என்று வாழ்த்தினார்.