கோவில்பட்டி கோட்டத்தில் மஞ்சள் தேமல் நோயால் உளுந்து செடிகள் பாதிப்படைந்துள்ளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.




கோவில்பட்டி கோட்டத்தில் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், சூரியகாந்தி, கம்பு, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். நிகழாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் மானாவாரி விவசாயம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மழை பெய்யும் என நம்பி ஆடி பட்டத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விதைப்பு செய்தனர். இதில், நிலத்தில் ஈரப்பதம் இல்லாததால் பயிர்களை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், பனிப்பொழிவு இருந்ததால் உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 80 சதவீத உளுந்து செடிகள் சேதமடைந்துவிட்டது. இந்தாண்டு இதன் மஞ்சள் தேமல் நோய் மகசூல் கிடைக்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, மானாவாரி நிலத்தில் 4 முறை உழவு, களை பறித்தல், விதை வாங்குதல், விதைத்தல், அடியூரம், மேலுரம் என இதுவரை சுமார் ரூ.30000 வரை விவசாயிகள் செலவழித்துவிட்டனர். ஆனால், மழை இல்லாமல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வைரஸ் நோய் போன்றது. மழையில்லாமல் நிலங்களில் ஈரத்தன்மை குறையும் போது, உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் ஏற்படும். நிலங்களில் எங்காவது ஒரு இடத்தில் காணப்பட்டாலும், அது அடுத்தடுத்து அங்கு பயிரிடப்பட்டுள்ள உளுந்து செடிகள் முழுவதும் பரவிவிடும் தன்மை கொண்டது. கோவில்பட்டி கோட்டத்தை பொறுத்தவரை சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. மஞ்சள் தேமல் பாதிப்பு காரணமாக உளுந்து செடிகள் அனைத்து பச்சை நிறத்தை இழந்து, அதன இலைகள் முழுவதும் மஞ்சளாக மாறி உள்ளது. 




இதுவரை வேளாண்த்துறை அதிகாரிகள் வந்து, இதனை பார்வையிட வில்லை. எனவே, வேளாண்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதே போல், அரசும் விவசாயிகளின் பிரச்சினைகளை பரிசீலித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க முன் வர வேண்டும். அதே போல், 2020-21-ம் ஆண்டுக்குரிய விடுபட்ட பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.