தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் விலை குறைவால், போதிய விலை கிடைக்கவில்லை என தேங்காய் வியாபாரிகள் மற்றும் நார் உரிக்கும் கூலி தொழிலாளிகள் வேதனையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். பெரும்பாலான விவசாயிகள் பாக்கு, தென்னை போன்ற நீண்ட காலப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விவசாயிகளிடம் தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து அதில் வரும் இளநீர் மற்றும் தேங்காய் அறுவடை செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை கர்த்தானூர் இராமியணஹள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் தேங்காயை அறுவடை செய்து அதனை இரண்டு ரகமாக தோலுரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு இடத்தில் ஆண்டுதோறும் குறைந்தது 30 தொழிலாளர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
இங்குள்ள வியாபாரிகள் தேங்காயை கூலி ஆட்கள் வைத்து அறுவடை செய்து, வண்டி வைத்து எடுத்து வந்து, ஓரிடத்தில் வைத்து, நார் உரித்து மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் உள்ளூரில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக தேங்காய்களை வாங்கி செல்கின்றனர். இதில் விவசாயிகளிடம் இருந்து ஒரு தேங்காய் ஒன்பது ரூபாய் என வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கப்படும் தேங்காய் அறுவடை செய்து, வண்டி வாடகை, உரிக்கும் கூலி என ஒரு தேங்காய்க்கு மூன்று ரூபாய் வரை செலவு செய்கின்றனர். வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் விலை 15 வரை விற்பனை செய்தால் தேங்காய் வியாபாரிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை அளவுக்கு அதிகமாக இருந்தால், தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் ஏற்றுமதி, கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக சரிந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் 15 ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து 9 ரூபாய்க்கு வாங்கி, அதற்கு மேல் அறுவடை, ஏற்றுமதி, நார் உரிக்கும் கூலி என மூன்று ரூபாய் செலவு செய்து ஒன்பது ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால் வியாபாரிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆண்டுதோறும் இந்த தேங்காய் நார் உரிப்பதற்கு 30 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதால், இழப்பு ஏற்படுகிறது. வியாபாரத்தை நிறுத்தினால், 30 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். வருவாய் கிடைக்க வில்லை என்றாலும், கூட 30 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து தேங்காய் ஏற்றுமதி செய்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், காவேரிப்பட்டிணம், போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளர்களுக்கு 1.20 பைசா வரை கூலி வழங்கப்படுகிறது.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் விற்பனை மற்றும் விலை குறைந்துள்ளதால், தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளர்களுக்கு காய் ஒன்றுக்கு 90 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தேங்காய் விலை ஏறினால் மட்டுமே தொழிலாளர்களுக்கான கூலி உயரும் நிலை உள்ளது. எனவே தேங்காய் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்து கொடுத்தால், கூலித் தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும் என தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்