திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யும் திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்யும் பயிருக்கு இ-அடங்கல் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.


துகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் காரீப் 2016 முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்-2 (சம்பா) மற்றும் மக்காசோளம்-3, உளுந்து, மணிலா, கரும்பு, மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 




 


எனவே நெல்-2 (சம்பா) மற்றும் மக்காசோளம்-3, உளுந்து, மணிலா, கரும்பு, மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை பயிர்களை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான இ-அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம். இ-அடங்கல் அவசியம் இதில் நெல்-2 (சம்பா) பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி, மக்காச்சோளம்-3 மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதி, மணிலாவிற்கு டிசம்பர் மாதம் 31-ந்தேதி, மிளகாய் பயிருக்கு ஜனவரி மாதம் 31-ந்தேதி, மரவள்ளி மற்றும் வாழை பயிருக்கு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி, கரும்பு பயிருக்கு மார்ச் மாதம் 31-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் காலங்களில் மழை அல்லது வறட்சியால் சேதமான பரப்பு இ-அடங்கலில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் காப்பீடு செய்யும் பயிருக்கு இ-அடங்கலில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு பயிருக்கு ஒரு இ-அடங்கல் மட்டுமே இருக்க வேண்டும். பயிரிடப்பட்டுள்ள பரப்பளவும் இ-அடங்களிலுள்ள பரப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். எனவே காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவதற்குள் விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்திட கடைசி நாள் வரை காத்திராமல் முன்னரே காப்பீடு செய்து பயன் பெற வேண்டும். எனவே விவசாயிகள் இயற்கை சீற்ற நிகழ்வுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது நெல்-2 (சம்பா) மற்றும் மக்காசோளம்-3, உளுந்து, மணிலா, கரும்பு, மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளவும். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.