தஞ்சாவூர்: காவிரி பாயும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக நெல் உலர்த்தும் களங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகுமா?
டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கடலை, எள், பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வர். ஆனாலும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யும் நெல்லை காய வைப்பதற்கு சாலை மற்றும் பொது இடங்களைப் விவசாயிகள் பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. கிராமங்களில் போதுமான கள வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது.
டெல்டா மாவட்டத்தில் பல்வேறு பயிா்கள் பயிரிடப்பட்டாலும், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை காய வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் சாலைகளிலும், பைபாஸ்களிலும் விவசாயிகள் நெல்லை காய வைக்கின்றனர். இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தற்போதைய நிலையில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு நெல் நடவுச் செலவு, உழவு செய்தல், கரை கட்டுதல் மற்றும் இடுபொருள்கள் என ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை செலவாகிறது. நெல் கொள்முதலின் போது நெல்லில் ஈரப்பதம் உட்பட பல்வேறு நிலைகள் பார்க்கப்படுகிறது. நெல்லை காய வைக்கும் களம் இல்லை. இதனால் விவசாயிகள் சாலைகளில் நெல்லை காய வைக்கின்றனர்.
இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்கின்றனர். கிராமங்களில் நெல்லை காய வைக்கும் களம் இல்லை. இதனால் மழை, வெயிலுக்கு இடையே சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை வணிகத் துறை அல்லது நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் களம் வசதி ஏற்படுத்தவும், நெல்லை மூடி வைக்க தாா்ப்பாலின் ஆகியவையும் வழங்கவும் வேண்டும் என்று விவசாயிகள் நெடு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கை தற்போதைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தஞ்சை 8.கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயி குமார் கூறியதாவது:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிராமங்கள் தோறும் நெல்லை காய வைக்கும் களம் அமைத்து தர வேண்டும். அதேபோல், விவசாயிகளுக்குத் தேவையான நெல் மூடி வைக்கும் படுதா மற்றும் தாா்பாலின் ஆகியவை அந்தந்த கிராமங்களில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மிகவும் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். இதனால் கிராம சாலைகள் மற்றும் பைபாஸ் சாலைகளில் நெல்லை விவசாயிகள் காய வைக்கும் நிலை மாறும். எனவே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு விற்பனை வரை வேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே கிராமங்கள் தோறும் விவசாயிகள் நெல்லை காய வைக்க தேவையான களங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.