வெற்றிலை சாப்பிடுவது ஜீரணத்திற்கு உகந்தது என்பதால்தான் கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலமான இக்காலம் வரை வெற்றிலைக்கு என்று தனி இடம் உள்ளது.

 

இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்கு கவனமும், தொழில் திறமையும் வேண்டும். வளமான, வடிகால் வசதியுள்ள நிலமும், பற்றாக்குறை இல்லாத நீரும், கொடி வளர்வதற்கான உயிர்க்காலும் வெற்றிலை சாகுபடிக்குத் தேவை. இப்படித் திட்டவட்டமான தேவைகளைக் கொண்ட கொடிக்கால் சாகுபடியைப் பரம்பரைத் தொழிலாகப் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போதைய மழைக்காலத்தில் வெற்றிலை சாகுபடியில் விவசாயிகள் பல்வேறு பூச்சித்தாக்குதலை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று தஞ்சை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளதாவது:

 

வாடல் நோய்: இலைகள் பளபளப்பை இழக்கும். வேர்கள் அழுகியும் தண்டு பகுதி நார் தாராக கிழிபட்டதுபோல் தென்படும். இலைகளில் சுட்ட கத்தரிக்காய் போன்ற புள்ளிகள் தென்படும். இதற்கு விதைக் கொடி நேர்த்தி, சமச்சீர் உரமிடல், வேப்பந்தழை அல்லது எருக்கு இலையை ஏக்கருக்கு 1.5 டன் என்ற அளவில் இடுதல் வேண்டும். செப்டம்பர் முதல் ஜனவரி வரை மாதம் ஒரு முறை 0.25 சதம் போர்டோ கலவையை பார்வாங்கி ஊற்றுதல், நோய் வரும் முன்னரே பாதுகாத்தல் மிகவும் அவசியம்.

 



 

தீச்சல் அல்லது இலைக்கருகல் நோய் : இலையின் ஓரங்களில் சிறு கருநிறப்புள்ளிகள் தோன்றி பின் இவை இணைந்து இலைகள் தீய்ந்ததுபோல் காணப்படும். இதற்கு கொடிக்கால் சுகாதாரம் காத்தல். குமான்-எல் ஒரு லிட்டருக்கு 2-மில்லி அல்லது போர்டோ கலவை 0.25 சதம் 15- 20 நாட்கள் இடைவெளியில் 3 - முறை தெளிக்க வேண்டும்.

 

குளிர் காலத்தில் நீர் பாய்ச்சுவதை குறைத்து பட்டத்தில் சூரிய ஒளிபடும்படி செய்ய வேண்டும். இரண்டரை கிராம் மயில் துத்தத்தையும் இரண்டரை கிராம் நீர்த்த சுண்ணாம்பையும் தனித்தனியாக அரை லிட்டர் நீரில் கரைக்கவேண்டும். அரை லிட்டர் மயில் துத்தக்கரைசலை, அரை லிட்டர் சுண்ணாம்பு கரைசலில் கலந்து உடனே பயன்படுத்த வேண்டும். கலவை தயார் செய்வதற்கு மண்பாண்டம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

 

போர்டோ கலவையை தயாரிக்க இயலாத சூழ்நிலையில் கடைகளில் கிடைக்கக்கூடிய காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை 0.25 சதம் என்ற அளவில் பயன்படுத்தலாம். செதில்பூச்சி தாக்குதல்: இதன் கழிவுப் பொருள்கள் வெற்றிலையின் மேல்படிந்து "மை" உண்டாகிறது.

 



 

இலைகருட்டை பூச்சிகள்: இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இலை கிண்ணம்போல் சுருண்டு கொடிவளர்ச்சி குன்றுகிறது. இதற்கு குளோர்பைரிபாஸ் மருந்தை 2 மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்தல் வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒரு முறை 3 அல்லது 4 தடவை தெளிக்கவேண்டும்.

 

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை வாடல் நோயும் ஏப்ரல் மாதத்திலிருந்து முதல் ஜூலை மாதம் வரை தீச்சல் என்கிற இலைக்கருகல் நோயும், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை பாக்டீரியா ஈரப்புள்ளி மற்றும் கருந்தாள் நோய்களும் பயிரை அதிகளவில் தாக்குகிறது. பூச்சிகளில் செதில் பூச்சி ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலும் சிவப்பு சிலந்தி பூச்சி பிப்ரவரி முதல் ஜூலை வரையிலும் அதிக அளவில் தென்படுகிறது.

 

உரமிடுதல் : ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 12 டன்னும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60:40:20 கிலோவும் தேவை. இவைகளை மூன்று சமபாகங்களாகப் பிரித்து, கொடி தூக்கிக் கட்டிய 10-வது நாள் ஒரு முறையும், பிள் 45 நாட்கள் இடைவெளியில் இரு முறையும் இடவேண்டும். அறுபது கிலோ தழைச்சத்தில் 30 கிலோவை யூரியா மூலமும், 30 கிலோவை வேப்பம் பிண்ணாக்கு மூலமும் இடுதல் வேண்டும்.

 

நீர்ப்பாசனம் : மண்ணின் ஈரத்தன்மை மற்றும் மழை இவற்றைப் பொறுத்து குளிர் காலத்தில் 4-லிருந்து 5 நாட்களுக்கொரு முறையும், வெயில் காலத்தில் ஒருநாள் வீட்டு ஒருநாளும் நீர் இறைத்தால் போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.