தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட மிஞ்சியுள்ளது. விவசாயிகள் மிகுந்த மும்முரத்துடன் குறுவை சாகுபடியை தொடங்கியதால் இலக்கு மிஞ்சப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மும்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் கோடை சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகம் இருக்கும். காலதாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டால் சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர்.
மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக் கடைகள் மற்றும் வேளாண்மைத்துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் வேளாண்மைத் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 1,93,771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
அதே நேரத்தில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகளும் சாகுபடி பணியை உரிய நேரத்தில் மேற்கொண்டனர். அதன்படி ஜூலை 31 ம் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1,95,130 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 1,52,646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 42,484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதே நிலையில் தான் காவிரி டெல்டாவின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழையும் பெய்ததால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் அதிம் ஈடுபட்டனர். மேலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும் விவசாயிகளுக்கு ஒரு ஊக்கத்தை அளித்தது. சாகுபடிக்கு தேவையான பயிர் கடனும் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை பற்றாக்குறை இல்லாமல் வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்தோம். கடந்தாண்டு மேட்டூர் அணை காலதாமதாக திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியும் காலதாமதமாக தொடங்கியது. இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியதால், அதற்கான இலக்கை நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டோம். அதன்படி இந்தாண்டு இலக்கை தாண்டிய சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம். அதனால் இம்முறை குறுவை அறுவடை கடந்தாண்டை விட அதிகரிக்கும் என்றனர்.