மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு இது வரை இல்லா அளவிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் கடைசி நேரத்தில் ஒரு நாளைக்கு ஆவினுக்கு 38 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஆவினுக்கு கொள்முதல் குறைந்து தினசரி 25 லட்சம் லிட்டர் என குறைந்துவிட்டது., ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ளன, பல்லாயிரக்கணக்கான சங்கங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது என பேசினார்., மேலும் இந்த சூழ்நிலையை பரிசீலனை செய்து அரசிடம் கோரிக்கைகளை வைத்து போராட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளோம் எனவும் குறிப்பாக தமிழ்நாடு அரசு வந்த புதிதிலையே 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தனர். இதன் மூலம் ஆவினுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.



 

இதன் காரணமாக பால் கொள்முதலை விரிவு படுத்த முடியாத நிலையில் தற்போது உள்ளனர். சென்ற ஆண்டு நீண்ட போராட்டம் நடத்தியதன் அடிப்படையில் 3 ரூபாய் மட்டுமே உயர்த்தியது, பாலுக்கு 10 ரூபாய் விலை உயர்வை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். பாலை வண்டிகளில் ஏற்றும் போதே அதன் தன்மைகளை ஆய்வு செய்து பாலின் அளவுகளை குறித்து பால் உற்பத்தியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஆவினுக்கு கொண்டு வரும் போது தண்ணீர் கலக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கும், சங்கத்தினருக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.



 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக் 17,18,19 ஆம் தேதிகளில் மாவட்ட ஆவின் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்” என பேசினார். மேலும், உடனடியாக தமிழ்நாடு அரசு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி கோரிக்கைகளை அமல் படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார். மேலும், “அமைச்சர் மனோ தங்கராஜ் பாலின் சக்தி அடிப்படையில் பாலின் கொள்முதல் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார், அது ஏமாற்று அறிவிப்பு, அந்த அறிவிப்பில் உண்மை இல்லை.



 

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 90% சதவிகித பால் உற்பத்தியாளர்களின் பாலில் இந்த சத்து கிடைக்க வாய்ப்புகள் இல்லை, 90% சதவீத பால் உற்பத்தியாளர்களுக்கு 8.0 எஸ்.எல்.எப், 4.0 கொழுப்பு என்ற சத்து மட்டுமே உள்ளது. இல்லாத சத்திற்கு அமைச்சர் விலையை அறிவிக்கிறார், இது போலியான அறிவிப்பு. எருமை மாடுகள், நாட்டு மாடுகளிடம் மட்டுமே இது போன்ற சத்துக்கள் இருக்கும், இதெல்லாம் 1990 க்கு பின் இதெல்லாம் அழிந்து விட்டது. இப்போது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படை கலப்பின ரக மாடுகளைத் தான் அனைவரும் வைத்துள்ளனர். அந்த மாட்டிற்கு இல்லாத சத்திற்கு இன்று விலை உயர்வு என்பது பித்தலாட்டம்” என பேட்டியளித்தார்.