தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கொத்தங்குடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். எனவே கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 


முப்போகம் விளையும் நெற்களஞ்சியம்


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.


கோடை நெல் சாகுபடி அறுவடைப்பணிகள்


மானாவாரி நிலங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம் உட்பட பல பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் கோடையில் நிலக்கடலையும், எள்ளும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் பம்ப்செட் வசதியுள்ள பகுதிகளில் கோடை நெல் சாகுபடியும் நடக்கும். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி நடந்து அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒருசில பகுதிகளில் அறுவடைப் பணி நடந்து வருகிறது.


விற்பனைக்காக கொட்டி காத்திருக்கும் விவசாயிகள்


தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டத்தில் கொத்தங்குடி பகுதியில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொத்தங்குடி பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் முன்பு விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர்.




குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது


கொத்தங்குடி அரசு கொள்முதல் நிலையத்தில் தினசரி குறைந்த அளவிலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால்  நெல் அதிகளவில் தேக்கமடைந்துள்ளது. மேலும் இப்பகுதிகளில்  கடந்த இரண்டு நாட்களாக  மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதோடு மழை பொழிவு காரணமாக  நெல் அறுவடை செய்யும் பணியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


மழையால் நெல் நனைந்து விவசாயிகள் வேதனை


இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  கொத்தங்குடி பகுதியில் தற்போது கோடை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பக்கத்தில் உள்ள கொத்தங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் தினசரி 500 மூட்டைகள்  என்ற அளவில்  குறைந்த அளவிலான நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.


அதோடு கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வார கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால தினசரி 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களிலும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.