தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சாலியமங்கலம் பகுதியில் அறுவடை செய்த நிலக்கடலையை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


முப்போகம் சாகுபடி


தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் கோடை சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை அறுவடை பணிகள் முடிந்துள்ளது. அறுவடை செய்த நிலக்கடலையை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.


நிலக்கடலை சாகுபடி


கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, வாழை போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக மானாவாரி நிலங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, உடையார் கோவில் ஒரத்தநாடு, திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம் உட்பட பல பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




காணாமல் காய் காய்க்கும்


உலக அளவில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது. மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது பயறு வகை குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் மற்ற வகை பயறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும்.


சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் கடலை முக்கிய இடத்தை வகிக்கிறது. சரியான பட்டமான கார்த்திகை, மார்கழி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பது சிறந்தது ஆகும். ஒரு சில பகுதிகளில் கோடையில் நிலக்கடலையும், எள்ளும் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டனர். இந்த நிலக்கடலை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 


நிலக்கடலை காய வைக்கும் பணி


அறுவடை செய்த நிலக்கடலையை சாலையில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலை காய வைப்பதில் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2 நாட்களாக வெயில் நன்கு அடிப்பதால் நிலக்கடலை காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இருப்பினும் காலை முதல் மதியம் வரை நன்கு வெயில் அடித்தது. மதியத்திற்கு மேல் கருமேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் சாலையில் காயவைத்த நிலக்கடலையை குவித்து சாக்குகளில் கட்டுவதில் ஈடுபட்டனர். இருப்பினும் ஓரிரு தூறல் விழுந்த நிலையில் மழை வராதததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.