தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக கூறிக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் போலி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து மக்கள் மத்தியில் எச்சரிக்கை தேவை என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தி உள்ளார்.


அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனம் என பொய் தகவல்


தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனம் என கூறிக்கொண்டு போலியான பட்டியல்கள், போலியான லெட்டர் பேடு பயன்படுத்தி சிலர் உலா வருகின்றனர். இவர்கள் தென்னை மரங்களுக்கு உரம் வைத்து கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசிடம் அனுமதி பெறாமல், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனம் எனக்கூறிக்கொண்டு, சில தனியார் நிறுவனங்கள் செயல்படுவதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இம்மாதிரியான போலி நிறுவனங்கள், வசதிப் படைத்த பெரிய தென்னை விவசாயிகளை தொடர்பு கொண்டு, தாங்கள் வேளாண் துறை ஒப்புதல் பெற்ற துணை நிறுவனம் என அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.


தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக மோசடி


பின்னர் உங்கள் தோப்பில் உள்ள தென்னை மரங்களுக்கு உரம் வைக்கிறோம். இதனால் மரங்கள் பாதிப்பின்றி இருக்கும் என்று கூறி பணம் பெற்று வருகிறார்கள். சில இடங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


மேலும், விவசாயிகளின் மனநிலையை புரிந்துகொண்டு விளைநிலங்களுக்கு கம்பிவேலி அமைத்து தருவதாக கூறி, அதற்கு முழுமான்யம் பெற ரூ.1200 விண்ணப்பக் கட்டணம் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.1,20,000 மானியம் பெற்றுத்தருவதாகவும் விண்ணப்பம் கொடுத்து, பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.


விவசாயிகளின் ஒத்துழைப்பு தேவை


எனவே, இதுபோன்ற போலி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. அரசுத்துறையின் பெயரை இவர்கள் போலியாக பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரியவருகிறது. இதுபோன்ற போலி நிறுவனங்களை கட்டுப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதுபோன்று, சந்தேகப்படும்படியான நபர்கள் தங்களை அணுகினால், அவர்களின் பெயர், தொலைபேசி எண் விவரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் புகைப்படத்தையும் செல்போனில் பதிவு செய்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தென்னை சாகுபடி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற போலி நிறுவனங்கள் தென்னைக்கு உரம் வைப்பதாக தெரிவித்து விவசாயிகளிடம் இருந்து பணத்தை பறித்து விடுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வரும் விவசாயிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.