தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இயற்கை முறையில் கீரை சாகுபடியிலும் சாதித்து வருகின்றனர் விவசாயிகள். அப்படி கீரை சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வரும் திருவையாறு அருகே வடுகக்குடியை சேர்ந்த விவசாயி மதியழகன் சாத்தனூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் பல வகை கீரை சாகுபடி செய்து வருகிறார். 


கீரைகளுக்கு நிகர் கீரைகள்தான்


கீரை சாகுபடி குறித்து அவர் கூறியதிலிருந்து .... நான் மொத்தம் மூணு ஏக்கர்ல கீரை வகைகள் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன்.. இந்த கீரை சாகுபடின்னே சொல்லக்கூடாது. மூலிகைகள் தான் சொல்லணும். ஏன்னா உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பதில் கீரைகளுக்கு நிகர் கீரைகள் தான். அதனாலதான் இதுல லாபத்தை பார்க்காமல் மக்களுக்கு நம்மால் முடிந்த சிறிய அளவிலான நல்லது செய்றோம் என்ற திருப்தியில் கீரை சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். இயற்கை முறையில் ரசாயனம் கலப்பு இல்லாம கீரை வகைகளை உற்பத்தி செஞ்சிட்டு இருக்கேன்.


கீரை சாகுபடிக்கு மண் நன்றாக பொலபொலவென்று இருக்கணும். இதற்காக 2 முறை உழுது பின்னர் அடியுரமாக சுமார் 4 டிராக்டர் எரு மட்டும் அடிப்போம். பின்னர் மீண்டும் ஒரு முறை உழவு செய்தால் நிலம் தயாராகி விடும். கீரை விதைகள் சிறியதாக இருப்பதால் அதனுடன் மணல் அல்லது உலர்ந்த மண்ணைக் கலந்து தூவிவிடவேண்டும். விதையைத்தூவிய பின் லேசாக துடைப்பத்தை வைத்து கிளறிவிட்டால் விதைகள் மண்ணில் புதைந்துவிடும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து விதையின் அளவும் மாறுபடும். வல்லாரை, அரைக்கீரை போன்றவற்றிற்கு விதை தேவையில்லை, தண்டு நட்டாலே வளர்ந்துவிடும்.


பம்ப்செட் தண்ணீரில் இயற்கை வேளாண்மை


நான் 3 ஏக்கரில் பல கீரைகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். உதாரணத்திற்கு அறுபது சென்ட் நிலத்தை 4 பாகமாகப் பிரித்து, உழவு செய்வோம். இங்க பம்ப் செட் போட்டு இருக்கிறதுனால தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதும். சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரைன்னு என 10 வகை கீரைகளை சாகுபடி செய்யறோம். விதைக்கறதுக்கு முன்னாடி விதைகளை ஒரு மணி நேரம் வெயிலில் உலர்த்தி, பின்பு மாலை வேளையில் விதைப்பு செய்ய வேண்டும். வெயில் காலங்களில் சிறுகீரையில் மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். இதை வெள்ளை மொட்டு என்று சொல்வோம். ஆரம்பத்திலேயே கவனித்து பூச்சி தாக்கிய செடியை பிடுங்கி அழித்து விடவேண்டும். இல்லையேல் கட்டுப்படுத்த முடியாது.


பனிக்காலத்தில் இலைப்புழுத் தாக்குதல்


பனிக்காலங்களில் இலைப்புழுத் தாக்குதல் இருக்கும். ரசாயன விவசாயத்தில் இலைப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும், இயற்கை விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். கீரைகளின் வயதைப் பொறுத்து தனித்தனியாக பிரித்து பயிர் செய்வோம். உதாரணமாக ஒரு மாத வயதுடைய கீரைகளை அருகருகே உள்ள பாத்தியில் போடுவோம். நான்கு மாதங்களுக்கு பலன் தரக்கூடிய கீரைகளை தனியாகப் போடுவோம். ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய கீரைகளை தனிப்பகுதியில் போடுவோம். ஒரு ஏக்கர் நிலம் பயிர் செய்யப் போறோம்னா மூன்று பாகமா பிரித்து பயிர் செய்யலாம்.


முளைக்கீரை, சிறுகீரை போன்றவை ஒரு மாதத்தில் வளர்ந்து விடும். இந்தக் கீரைகளை விதைத்து 21 முதல் 25 நாட்களுக்குள் பறிக்கலாம். பறித்தபின் மீண்டும் விதைகளை விதைத்து விட வேண்டும். அரைக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, புளிச்சக்கீரை போன்ற கீரைகளை விதைத்து ஒரு மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் வரை பறிக்கலாம். அகத்திக்கீரை போன்ற கீரைகள் ஒரு வருடத்திற்கு மேல் பலன் கொடுக்கக்கூடிய நீண்ட காலப்பயிர்கள் ஆகும்.


வாரத்தில் 2 முறை களைப் பறிப்போம்


ஒரு மாத பயிர், நான்கு மாதப்பயிர், ஒரு வருடப்பயிர் இவைகளை அருகருகில் நடவு செய்துவிட்டால் உழமுடியாது. இடமும் வீணாகும், இடைஇடையே கொத்தி விட்டு பயிர் செய்வதற்கும் அதிக வேலையாட்கள் தேவைப்படும். மழைக்காலங்களில் கீரைகளை வெகு ஜாக்கிரதையாக தண்ணீர் நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் 2 முறை நாங்களே களை பறித்து விடுவோம். உரம் தெளிக்கிற வேலை இல்லை. பம்ப் செட் தண்ணீர் பாத்தி வழியாக பாய்ச்சுவோம். 


பொதுவாக கீரை சாகுபடி செய்ய வெயில் காலம் தான் உகந்தது. மழைக்காலத்தில் கீரைகள் அழுகிப் போயிரும். நாங்க மக்கள்ட்ட நேரடியா விக்கும் போது ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு விற்பனை செய்வோம். ஆனா அதுலயும் ரேட் கம்மி பண்ணி கேப்பாங்க, ஒரு கட்டு கீரைக்கு ஆள் செலவு கூலி எல்லாம் போக இரண்டு ரூபாய் தான் கிடைக்கும். நாங்க நஷ்டப்பட்டாலும் மக்கள் நல்லா இருக்கணும் என்ற நோக்கத்தில் இஷ்டப்பட்டு கீரை சாகுபடியை செய்துக்கிட்டு இருக்கோம். நேரடியா போய் விற்பனை செய்ததால் வண்டியில் வைத்து எடுத்துட்டு போகணும் அதுல நிறைய செலவு ஏற்படறதால மக்கள் கிட்ட நேரடி விற்பனை முறைய கம்மி பண்ணிக்கிட்டோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மெஸ், மருத்துவமனை உணவகங்களில் நேரடியாகவும், வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கும் கீரைகளை கொடுக்கிறோம். 


ஒரு நாளைக்கு இருமுறை கீரைகள் பறிப்போம்


அவங்களுக்கு ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு தரோம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கீரைகள் பறிப்போம். காலையில சீக்கிரமோ 500 கட்டு கீரை பறிச்சு வைச்சால் வியாபாரிகள் வந்து நேரடியாக வாங்கிக்கிட்டு போயிடுவாங்க. அதுக்கு அப்புறமா வெயில் தாழ்ந்த பின்னாடி மறுபடியும் 450ல் இருந்து 500 கட்டு வரை பறிப்போம். இது மாலை வேளையில் காய்கறி சந்தையில விக்க வியாபாரிகள் வந்து வாங்கிக்கிட்டு போவாங்க. வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வதால் லாபம் கம்மிதான். ஆள் கூலி, தண்ணீருக்கு ஆகும் செலவு, உள்ளிட்ட செலவுகள் போக ஒரே கட்டு கீரைக்கு ரூ.2 தான் கிடைக்கும்,இது எங்களுக்குச் சொந்த நிலமும் கிடையாது குத்தகை முறையில் தான் சாகுபடி செஞ்சிட்டு வரோம். 


புளிச்சக்கீரை எல்லாம் உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சி. வல்லாரை குடல் புண்களைப் போக்கும். அதே மாதிரி ஒவ்வொரு கீரைக்கும் நம்ம உடலுக்குத் தேவையான ஏகப்பட்ட ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறது. ஆட்டுக்கறி ரூ.800-க்கு விக்குது. கோழிக்கறி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டும்‌ நம் மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து கீரை வாங்குறதுக்கு எங்க கிட்ட கணக்கு பார்க்கிறாங்க. கீரையில் உள்ள சத்துக்களை தெரிஞ்சுக்கிட்டு அடுத்த தலைமுறையினர் தினமும் உணவுல கீரையை சேர்த்து கொள்ள வேண்டும்.  


கீரை விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்


பழைய சோற்ற விக்கிற காலம் வந்திருச்சு அதனால கீரைகளுக்கு மதிப்பு கொடுத்து எங்கள மாதிரி விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில மக்கள் பேரம் பேசக்கூடாது. நாங்கள் வியாபாரிக்கு ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு கொடுப்போம் அவங்க வெளியில ரூ.15ல் இருந்து 20 வரைக்கும் விக்கிறாங்க. ஆனா எங்களுக்கு இரண்டு ரூபாய் தான் இதுல லாபம் கிடைக்குது. அரசு எங்களுக்கு பெரிதளவில் மானியங்கள் எல்லாம் இன்னும் ஒதுக்கல.


தோட்டக்கலைத் துறை சார்பாகவும் அதிகாரிகள் நேரடியா வந்து எங்களை சந்திச்சு இதுக்கு ஒரு வியாபார சந்தையை ஏற்படுத்தி கொடுத்தா இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். வருடத்தில் ஒன்பது மாதம் வரை கீரைகள் நன்கு விளைந்து வரும். மூன்று மாதம் அதாவது மழைக்காலங்களில் கீரைகள் விற்பனை மந்தம்தான்.  ஒரு கட்டு சராசரியாக இரண்டு ரூபாய் எங்களுக்கு கிடைக்கிறது என்றால் மாதத்திற்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் இதே நாங்கள் நேரடியாக விற்பனை செய்தால் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கீரைகள் பறிக்க வேண்டும் என்பதால் வருமானம் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வியாபாரிகளிடமே நேரடியாக விற்று விடுகிறோம்.


முக்கியமாக வல்லாரை, சிவப்பு புளிச்சக்கீரை, பசலை கீரை போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அதேபோல் தண்டுக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை ஆகியவற்றையும் மக்கள் விரும்பி  வாங்குகின்றனர். கீரை விவசாயிகளிடம் மக்கள் இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் பேரம் பேசாமல் வாங்கினால் அவர்களது குடும்பமும் நன்றாக வாழும். இவ்வாறு அவர் கூறினார்.