தஞ்சாவூர்: சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
சோயாவில் அதிகமான புரதமும், குறைவான கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது. பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கிடைக்கிறது. சோயா பயறுவகை பயிராகவும், எண்ணெய் வித்து பயிராகவும் பயரிடப்படுகிறது. பொதுவாக பயறுவகைகள் புரதச்சத்து நிறைந்தவை. இதில் மற்ற பயறுகளில் 25 சதம் புரதமும், சோயாவில் 40 சத புரதமும் காணப்படுகிறது. எனவே மாசிபட்டத்தில் மகத்தான மகசூல் பெற சோயா சாகுபடி செய்து புரத உணவுக்கு புத்துயிர் ஊட்ட விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா அழைப்பு விடுத்துள்ளார்
பட்டம் : மாசி பட்டம்
இரகம்: டி.எஸ்.பி.21, பஞ்சாப்- 1
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்க 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலக்க வேண்டும். மேலும் ஒரு பாக்கெட் 200 கிராம் ரைசோபியம், ஒரு பாக்கெட் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசி கஞ்சியுடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கலந்து விதைக்க வேண்டும்
அடியுரம்: ஏக்கருக்கு 17 கிலோ யூரியா, 20 கிலோ சூப்பர் பாஸ்பேட், 27 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும். ஜிப்சம் 80 கிலோ, சிங்சல்பேட் 10 கிலோ இடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.
இலைவழி உரமிடுதல்: பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக என்.ஏ.ஏ. என்கிற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 40 மில்லிகிராம் வீதமும், சாலிசிலிக் ஆசிட் ஒரு விட்டருக்கு 100 மில்லி கிராம் வீதமும் கலந்து தெளிக்கலாம். பின்னர் 15 நாள் கழித்து ஒரு முறை தெளிக்க வேண்டும்.
பூக்கும் சமயத்தில் ஒருலிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. அல்லது 20 கிராம் யூரியா வீதம் கலந்து தெளிக்க வேண்டும். விதைகளை 2-3 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 30 செமீக்கு 5 செமீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.
நீர்பாசனம்: விதைத்த மூன்றாவது நாளும், மண் வாகு, பருவத்திற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். அதிகமான தண்ணீரும், அதிகமான வறட்சியும் மகசூலை பாதிக்கும்.
களை மேலாண்மை: விதை விதைத்தவுடன் மண்ணில் ஈரம் இருக்கும்போது ஏக்கருக்கு 400 மில்லிலிட்டர் தெளிக்க வேண்டும். களை முளைத்த பின்பு தெளிப்பதாக இருந்தால் விதைத்த 20ம் நாள் 20 கிராம் இமஸித்தாபயிர் தெளிக்க வேண்டும்.
அறுவடை: செடியில் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதும் இலைகள் உதிர்வதும் அறுவடை செய்ய வேண்டிய அறிகுறிகள்.
100 கிராம் சோயாவில் அடங்கியுள்ள சத்து பொருள்கள்
புரதம்- 43-2 கிராம்
சுண்ணாம்பு சத்து = 240 மி.கி
மாவுச்சத்து --20.9 கிராம்
பாஸ்பரஸ் - 690 மில்லி கிராம்
நார்சத்து -3.7 கிராம்
இரும்புசத்து - 10.4 மில்லி கிராம்
கொழுப்புசத்து -19-5கிராம்
கரோட்டின் -426 மைக்ரோ கிராம் உட்பட பல சத்துக்கள் நிரம்பி உள்ளது. சோயாவில் 17 முதல் 20 விழுக்காடு வரை எண்ணெய் சத்து காணப்படுகிறது. இதில் நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
எண்ணெய் சத்து நீக்கப்பட்ட சோயாவில் 50 வீதம் தரம் மிகுந்த புரதமும் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, ஊட்டச்சத்து 'பி' போன்றவையும் நிறைந்துள்ளது. சோயா புரதத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. சோயா புரதம் அதிக செரிமானமாகும் தன்மையுடையது.
சோயாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
மொத்த சோயா உற்பத்தியில் 85 சதம் எண்ணெய் மற்றும் எண்ணெய்சத்து நீக்கப்பட்ட மாவு தயாரிக்கவும், 10 சதம் விதை பயன்பாட்டிற்கும் 5 வீதம் மட்டுமே நேரடியாக உணவு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அடர்வுடைய கொழுப்புப் புரதங்களின் அளவை கூட்டுவதன் மூலம் இதய சம்மந்தமான நோய்களை தடுக்க உதவுகிறது.
குறைந்த அளவு மாவு சத்தும், அதிக அளவு நார்சத்தம் காணப்படுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக சிறந்த புரதமாக பயன்படுகிறது. சோயா வரும் காலங்களில் சிறந்த உணவு பொருளாக கருதப்படுவதால், சோயா சாகுபடியை அதிகரிக்கவும். உற்பத்தி திறனை உயர்த்தவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கி, பலமடங்கு லாபம் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.