மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச போதிய மின்சார  இன்றி அல்லல்படுவது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து, விவசாயத்திற்கு 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.


காவிரி கடைமடை மாவட்டம் 


காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் காவிரி நீரை மட்டும் இன்றி இங்கு பல பகுதிகளில் நிலத்தடி நீரை கொண்டு சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையால் இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிழக்கு பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் 21 பம்பு செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  




இந்நிலையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, 12 மணிநேரம் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட மின் வினியோகத்தையும் குறைந்தது 3 மணிநேரமாக மின்வாரிய மாற்றியது. இதனால் தற்போது சம்பா தாளடி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் இம்மாவட்டம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், அதுவும் முன்பு வழங்கியது போன்று 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் மற்றும் அவர்களின் மின்சார தேவை குறித்து தொடர்ந்து ஏபிபிநாடு செய்தி தளம் செய்தி வெளியிட்டு வந்தது. 




ஏபிபி நாடு செய்தி எதிரொலி 


இந்நிலையில் ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது விவசாயிகளுக்கு 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கி வருகின்றது. இதற்கு பெரு முயற்சி எடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  மற்றும் ஏபிபி நாடு செய்தி தளத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.   




விவசாயிகளின் கருத்து 


மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் உரிய தேதியான ஜுன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி கடைமடை மாவட்டமாக இருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்து சேர மிகுந்த காலதாமதம் ஆகும்.  அதுவும் அந்த தண்ணீர் ஏ, பி வாய்க்கால் தூர்வாரப்பட்டு சி மற்றும் டி வாய்க்கால்கள் சரியாகவும் அல்லது பல இடங்களில் முற்றிலும் தூர்வார படாமலும் விட்டுவிடுவதால் மேட்டூரில் பாசனத்திற்காக திறக்கும் தண்ணீர் என்பது எங்கள் பகுதிக்கு காணால் நீர் தான். இருந்த போதிலும் நாங்கள் நிலத்தடி நீரை கொண்டு ஒரளவு இப்பகுதியில் விவசாயம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம்.




அவ்வாறான சூழலில் நிலத்தடி நீரை பயன்படுத்த எங்களுக்கு போதிய மின்சாரம் வேண்டும். அதுவும் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க வேண்டும். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக எங்களுக்கு உரிய முறையில் மின்சாரம் கிடைப்பதில்லை சிக்கல்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு அது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது எங்களின் வாழ்வாதார காக்கும் வகையில் மும்முனை மின்சாரம் 14 மணிநேரம் வழங்கப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ஏபிபிநாடு செய்தி தளத்திற்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளனர்.