கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள இருகூர் கிராமத்திற்கு உட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இயற்கை விவசாயியான இவர், அகரம் இயற்கை வழி வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். மேலும் இயற்கை விவசாயம் குறித்து குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கற்று தந்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது பலருக்கும் ஆர்வம் இருந்தாலும், எதனை எப்படி செய்வது என்பதில் உள்ள குழப்பம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கான தடையாக இருந்து வருகிறது. இந்த தடையை உடைக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் கட்டணமில்லாமல் இயற்கை விவசாய பயிற்சி திட்டத்தை தங்கவேல் அறிவித்துள்ளார். இதன்படி ஒரு செண்ட் நிலத்தில் விவசாயம் செய்யும் முறை, பயிர்களை பாதுகாத்தல், மகசூல் எடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்த பயிற்சிகளால் பலர் இயற்கை விவசாயம் செய்யும் முறைகளை கற்று வருகின்றனர்.




இதுகுறித்து இயற்கை விவசாயியான தங்கவேல் கூறும்போது, “எனது குடும்பமே விவசாய குடும்பம். தலைமுறை தலைமுறையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனிடையே ராசாயண தாக்குதல் வேளாண்மையில் அதிகமாக இருந்ததால் நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு எழுந்து 1991 ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். ராசாயண உரங்கள் வருவதற்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது, அதன் பயன்பாடு எப்படி இருந்தது என்ற கேள்விக்கான விடையை தேடியலைந்து கண்டறிந்தேன். அதுமட்டுமின்றி நம்மாழ்வார் மற்றும் சுபாஷ் பலேகர் ஆகியோரின் வழிகாட்டுதல்களும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட உதவிக்கரமாக இருந்தது.


பண்ணை கழிவுகள், கால்நடை கழிவுகள் ஆகியவற்றை நிலத்திற்கு உரமாக பயன்படுத்தி காய்கறிகள், கீரைகள், தானியங்கள் உள்ளிட்ட நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்து வருகிறேன். இயற்கை இடுபொருட்களை உரமாக்குவதால் மண்ணிற்கு வளம் கிடைக்கிறது. அதில் இருந்து வரும் உற்பத்தி பொருட்கள் வாழ்க்கைக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பையும் தருகிறது. பூச்சிகளை விரட்ட பூச்சி விரட்டி தாவரங்களை பயிரிடுகிறோம். மேலும் பல்லுயிர் சூழல் உருவாக்கும் பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்கிறோம். எனது பண்ணையை 6 ஆயிரத்தும் மேற்பட்டோர் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.




இந்த நிலையில் இயற்கை விவசாயத்தையும், எனது அனுபவங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என 1,2, 3 என்ற இலவச இயற்கை விவசாய பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளேன். அதன்படி ஒரு செண்ட் நிலம், 2 மணி நேர வேலை, 3 மாத கால பயிற்சி என்ற அடிப்படையில் இயற்கை விவசாயத்தை கற்று தருகிறோம். அதன்படி விவசாயம் கற்க வருபவர்களுக்கு ஒரு செண்ட் நிலம் நிலம் ஒதுக்கி தருவோம். தினமும் இரண்டு மணி நேர வேலை என பயிர் செய்தல், களை எடுத்தல், நாற்று நடுதல், பூச்சி விரட்டுதல், மகசூல் எடுத்தல் உள்ளிட்டவற்றை சொல்லி தருகிறோம். மூன்று மாத கால பயிற்சியில் இயற்கை விவசாயத்தை கற்று தருகிறோம். அந்த இடத்தில் விளையும் காய்கறிகளை அவர்களே எடுத்துக் கொள்ளலாம். விவசாயத்தை செலவு இல்லாமல் செய்யும் முறைகளை கற்று தருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கட்டணம் இல்லாமல் விவசாயத்தை கற்று வருகின்றனர். இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்எனத் தெரிவித்தார்.