Vinesh Phogat disqualified | பறிபோன பதக்கம்! வினேஷ் தகுதிநீக்கம்! நடந்தது என்ன?
பல்வேறு நெருக்கடிகளை தாண்டி ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினேஷ் போகத் பதக்க வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாஜக முன்னாள் எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் வீரர், வீராங்களைகள் நடத்திய போராட்டத்தில் வினேஷ் போகத்தும் முக்கியமானவர். அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்ட அவர், சர்வதேச போட்டியில் பங்கேற்க திறனற்றவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.
பல்வேறு நெருக்கடிகளை தாண்டி தீவிர பயிற்சி மூலம் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை வீழ்த்தி சாதித்து காட்டினார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளதை பலரும் கொண்டாடினர்.
இந்தநிலையில் அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் அவர், 100 கிராம் எடை அதிகமாக உள்ளதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உறுதி செய்துள்ளது. இரவு முழுவதும் எவ்வளவோ முயற்சித்தும் இன்று காலை அவரது உடல் எடையில் சில கிராம் கூடியிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
போட்டி விதிகளின்படி, உடல் எடை அதிகம் இருப்பதால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதனால் 50 கிலோ மல்யுத்த போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் மல்யுத்ததில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இருப்பினும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வளவு தூரம் வந்த வினேஷ் போகத்துக்கு இந்த கடின சூழலில் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.