IPL 2024 Finals | காவ்யா மாறனின் கனவு.. நிறைவேற்றுவாரா கம்மின்ஸ் உலகக்கோப்பை பாணியில் FINAL

ஐதராபாத் அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான, வாய்ப்பை கேப்டன் பேட் கம்மின்ஸ் மேலும் பிரகாசப்படுத்தியுள்ளார்.

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.கடந்த ஆண்டின் நவம்பர் 19ம் தேதியை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், லீக் சுற்றில் நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியாவை வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமயிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அதோடு, தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத, இந்திய அணியின் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் தான்,  ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் இந்திய மண்ணில் மற்றொரு பெரிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் அணியை ஐதராபாத் வீழ்த்தியது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள, இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. இந்த நிலையில் தான், யாருமே எதிர்பாராத விதமாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஒரு அணி,  மீண்டும் இறுதிப் போட்டியில் தொடரின் சிறந்த அணியை எதிர்கொள்கிறது. இது கடந்தாண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை போலவே காட்சியளிக்கிறது. இதனால் இந்த போட்டியானது ரசிகர்கள் இடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது, பேட் கம்மின்ஸை 20 கோடியே 50 லட்சத்திற்கு காவ்யா மாறன் ஏலத்தில் எடுத்தார். அப்போது, கம்மின்ஸை இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்தது சரியான முடிவல்ல என பலரும் விமர்சித்தனர். ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, முதல் தொடரிலேயே ஐதராபாத் அணியை கம்மின்ஸ் இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியுள்ளார். ஐதராபாத் அணி வெற்றி பெற்றதுமே, தனது தந்தையையும் கண்டதும், முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க ஓடிச்சென்று கட்டி அணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதே உற்சாகமும் சந்தோஷமும் காவ்யா மாறன் முகத்தில் இறுதி போட்டியில் பார்க்க முடியுமா?  பேட் கம்மின்ஸ் வெற்றி கோப்பையை வென்று காவ்யா மாறனிடம் கொடுப்பாரா அல்லது இத்தனை தடுப்புகளையும் உடைத்து கொல்கத்தா வெல்லுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola