சிக்கலான H1B விசா K விசாவை இறக்கிய சீனா இந்த சலுகைகள் நல்லா இருக்கே?சபாஷ் சரியான போட்டி | America | Trump | China K Visa |
அமெரிக்காவின் H1B விசா பிரச்னையான நிலையில், அந்த இடைவெளியை பயன்படுத்தி, இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் சீனா தனது K விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வேலைக்கு செல்வோர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய H1B விசாவிற்கு, ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் கட்டணத்தை அறிவித்து, அங்கு வேலைக்கு செல்வோரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால், ஒரு நாட்டிற்கு இது வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம், இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்கி, சீனா தனது K விசாவை, பல்வேறு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து தேற்போது பார்க்கலாம்.
இதையடுத்து, STEM, அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்காக அமெரிக்கா வழங்கி வரும் H1B விசா கட்டண உயர்வு இந்தியர்களை பெரிதும் பாதித்துள்ளது.இப்படிப்பட்ட சூழலில், இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சீனா, STEM துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர்களுக்காக, பல்வேறு சலுகைகளுடன் கே விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் முன்னேற்றத்திற்கு, உலகம் முழுவதிலும் உள்ள திறமையான இளைஞர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இதற்காகத் தான் தற்போது இந்த கே விசாவை அந்நாடு களமிறக்கியுள்ளது.தற்போது சீனாவில் 12 விசாக்கள் நடைமுறையில் உள்ள நிலையில், இந்த கே விசாவில் அவைகளைவிட அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விசாவை வைத்திருப்பவர்கள், சீனாவிற்குள் நுழையும் எண்ணிக்கை, அந்த விசா செல்லுபடியாகும் காலம், அவர்கள் அங்கு தங்கும் காலம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த கே விசாவை வைத்திருப்பவர்கள், சீனாவிற்குள், கல்வி, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிவதோடு, அது தொடர்பான தொழில் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கே விசாவிற்கு விண்ணப்பிக்க, அறிவியல், தெழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
இந்த விசாவிற்கு, வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த, சீன நிறுவனங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அடிப்படை தகுதியுள்ள இளைஞர்கள், தாங்களாகவே விண்ணப்பித்து கே விசாவை பெற்றுக்கொள்ளலாம். இதனால், இந்த விசாவை பெற்று சீனாவிற்கு சென்று கூட வேலை தேடிக் கொள்ளலாம்.இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வயது, கல்வி, அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சீன அரசு விசாவிற்கு ஒப்புதல் அளிக்கும். இந்த கே விசா, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விசாவிற்கான கட்டண விவரங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், அமெரிக்கா அளவிற்கு இல்லாமல், குறைந்த அளவிலேயே கட்டணங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.பிறகென்ன, இனி இளைஞர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக, சீனாவிற்கு படையெடுக்க வேண்டியதுதான்.