12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொடூரனை ஊர் மக்களே அடித்துக் கொலை செய்துள்ளனர். குளத்தில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்குவதற்காக கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் பதற்றமடைந்தனர். இரவு முழுவதும் சிறுமியை தேடியதாகவும், தாங்கள் உதவி கேட்டு முறையிட்டபோது காவல் துறையினர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 4 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக புகார் எழுந்தது.
இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் ஊர் மக்கள் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியின் உடல் இருக்கும் இடத்தை அந்த நபர் காட்டியது அனைவரையும் அதிர வைத்தது. குளத்தில் சாக்கு மூட்டையில் சிறுமியின் சடலம் கிடைத்தது. இதனை பார்த்ததும் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினரும் ஊர் மக்களும் குற்றம்சாட்டப்பட்ட நபரை அடித்தே கொலை செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டும், டயர்களைக் கொளுத்தியும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் பா.ஜ.க தொண்டர் சாந்தனு மண்டல் என்பவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் மரணம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இக்குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், சட்டப்படி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி கொடுத்ததும் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.