Trichy Kollidam | சரிந்து விழுந்த டவர்! ஆற்றில் விழுந்த இளைஞர்! பதறவைக்கும் காட்சி
கொள்ளிடம் ஆற்றில் 2 உயர் அழுத்த மின் கோபுரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் இருந்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்த பதைபதைக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடையாமல் இருக்க பாலத்தின் அருகே பக்கவாட்டு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பணையில் ஒரு பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை உடைந்துள்ளது.
கொள்ளிடம் பாலத்தின் அருகில் உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் கயிறு அறுந்து ஆற்றில் விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் பதறினர். ஆற்றில் வேகம் அதிகமாக இருந்ததால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அவரை உடனடியாக மீட்டனர்.