Thoothukudi abandoned village : REAL அத்திப்பட்டி.. காப்பாற்றப்போராடும் One Man
சிட்டிசன் படத்தில் 'அத்திப்பட்டி' என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது படக்கதை. ஆனால் நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம்.- அதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனாட்சிப்புரம்..! தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்றே ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் ஊரை காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்றோம். நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து மேல செக்காரக்குடி சென்று அங்கிருந்து மானாவாரி பயிர்களுக்கு இடையே பயணிக்கிறது மீனாட்சிபுரத்தின் சாலை. ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம். இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கும் பாதை கிடையாது.