Thiruvarur : காட்டூர பாத்து கத்துக்கணும் - Vaccine Village!
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழும் காட்டூர் கிராமம்....
உலகையே முடக்கியுள்ள கொரோனா பெருந்தொற்று அலையலையாக வந்து மக்களின் உயிரை பறித்து செல்கிறது.
கொரோனா முதல் அலை வந்த போது உரிய தடுப்பூசிகள், மருந்து வகைகள், கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்துதல், நாட்டுமருத்துவம் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை பெரும்பாலான மக்களை பாதித்து மக்களின் உயிரைக் குடித்து மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, போன்றவற்றால் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தான் திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடம் அமைந்துள்ள ஊர் காட்டூர் கிராமமாகும். இந்த கிராமத்தில் மொத்தம் 3ஆயிரத்து 332 பேர் வசித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது போலவே இந்த கிராமத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கடந்த நான்கு தினங்கள் நடைபெற்ற தடுப்பூசி முகாமின் மூலம் இந்த கிராமத்தை சேர்ந்த 18 முதல் 44 வயது உடையோர் சுமார் ஆயிரத்து 416 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். இதேபோல் 45 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர் சுமார் ஆயிரத்து 36 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு உள்ளனர்.
காட்டூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிகள், வெளிநாட்டில் வசிப்போர், 18 வயதிற்கு குறைவானவர்கள் என 34 நபர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள்.
காட்டூர் கிராமத்தில் நடைபெற்ற நான்கு நாள் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் சுகாதார துறையினர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்மூலம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசியை திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 21 ஆயிரம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.
காட்டூர் கிராம மக்களைப் போல பிற பகுதிகளில் வசிக்கும் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு உள்ளனர்.
பொதுமக்கள் தயக்கம் இன்றி இரு வகையான, இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்..... அவ்வாறு முன்வந்தால் மட்டுமே தமிழகத்தில் எத்தனை எத்தனை கொரோனா அலைகள் வந்தாலும் உயிரிழப்பை தவிர்த்து ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ முடியும்...