TN BJP president: தலைவர் ரேஸில் 3 பேர்! BJP தலைமை போடும் கணக்கு! நெருக்கும் சீனியர்கள்
ஜனவரி 21ம் தேதி பாஜகவின் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ரேஸில் இருப்பதாக சொல்கின்றனர்.
அண்ணாமலை, 2021-ம் ஆண்டு ஜூலையில் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜக விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மட்டுமே மாநில தலைவர் பதவி வழங்கப்படும். அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த மாநில தலைவர் யார் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது. அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே பாஜக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை தலைவரான பிறகு தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால் அதனை மனதில் வைத்து அண்ணாமலைக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக சொல்கின்றனர்.
ஆனால் மற்றொரு பக்கம் கட்சியின் முக்கிய புள்ளிகளும் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ரேஸில் இருப்பதாக சொல்கின்றனர். அண்ணாலை மீது அதிருப்தியில் உள்ள பாஜக சீனியர்கள் இந்த தரப்புக்கே ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறது.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்கின்றனர். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதன்பின் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான பரிந்துரைகளை கட்சித் தலைமையிடம் அளிப்பார். அதில் பாஜக தேசிய தலைமை புதிய தலைவரை தேர்ந்தெடுத்து 21ம் தேதி அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அண்ணாமலைக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் பட்சத்தில், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. ஏற்கனவே அண்ணாமலை ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக பாஜக சீனியர்கள் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையில் மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என டெல்லி தலைமை உத்தரவு போட்டுள்ளது.