Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..
புது நபர் கூடாரத்திற்குள் நுழைந்ததால் ஆத்திரமடைந்த திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை பாகனையும் அந்த நபரையும் மிதித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உலக பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில்.
இந்த கோவில் யானை தெய்வானை யை பராமரிக்க தலைமைப்பாகன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பாகன் செந்தில் மற்றும் உதயகுமார் ஆகிய மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதிய நேரங்களில் கோவில் யானை கட்டும் அறையில் தெய்வானை யானை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். பாகன்கள் ஒருவர் மாற்றி ஒருவர் யானையை பராமத்து வருவர். இந்நிலையில் தலைமை பாகன் மற்றும் துணை பாகன் செந்தில் ஆகியோர் வெளியே சென்ற நிலையில் துணை பாகன் உதயகுமார் யானை அருகில் இருந்துள்ளார். அப்போது அவரது உறவினர் சிசுபாலன் யானை கட்டும் அறையில் வந்து உதயகுமாரை சந்தித்ததாக கூறப்படுகிறது. சிசுபாலனும் வெளியூர் யானைப்பாகன் என சொல்லப்படுகிறது.
அப்போது சிசுபாலன் யானைக்கு பழங்கள் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மதியம் மூன்று முப்பது மணி அளவில் திடீரென யானை மிரண்டு சிசுபாலனை கீழே தள்ளிவிட்டுள்ளது. இதனை கண்ட துணைபாகன் உதயகுமார் யானையை தடுக்க முயற்சித்த போது அவரையும் கீழே தள்ளி காலால் இடறி உள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் கோவில் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தகவல் அறிந்து தலைமை பாகன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணைப்பாகன் செந்தில் ஆகியோர் யானை கட்டும் அறைக்கு வந்து யானையை ஆசுவாசப்படுத்தி தடுத்தனர். இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருச்செந்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.உயிரிழந்த இருவரின் உடலும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் மற்றும் கோவில் நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனவும் புதிதாக ஒருவர் யானை கூடத்தில் நுழைந்ததால் கோபம் ஏற்பட்டதால் இத்தகைய விபரீதம் நிகழ்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.